ஆர். முத்துக்குமார்
உயர் தொழில்நுட்பங்கள், மிகப்பெரிய முதலீடுகள் தேவைப்படும் வாகனங்கள் தயாரிப்பில் இந்தியா களம் இறங்குகிறது. இதுவரை அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், பிரேசில், ரஷ்யா, சீனா முதலிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வந்த விமானத் தயாரிப்பு துறையில் நாம் நுழைந்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது.
குஜராத் மாநிலம் வதோதராவில் ரூ.22,000 கோடியில் அமைக்கப்பட உள்ள சி-295 விமான தயாரிப்பு தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
உலகின் மிகப்பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனம் ‘ஏர்பஸ்’, டாடா உடன் இணைந்து குஜராத்தில் ரூ.22 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைத்துள்ளது.விமானத் தயாரிப்பு ஆலை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
‘‘ரத்தன் டாடா பத்தாண்டுகளுக்கு முன்பாக தனியாக விமானத் தயாரிப்பு ஆலையை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார். அவரின் கனவு தற்போது நனவாகி உள்ளது.
டாடா மற்றும் ஏர்பஸ் கூட்டணியில் குஜராத்தின் வதோதரா நகரில் இந்த ஆலை ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிட்டில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் குறைந்தபட்சம் 15 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக உருவெடுக்கச் செய்ய பெரிய அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் உலகத்துக்கானது. இந்தியா போர் விமானங்கள் மற்றும் தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் கார்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த வரிசையில் கூடிய விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானமும் உலக கவனத்தை ஈர்க்கும்.
இங்கு தயாராகும் சி295 ரக விமானம் இந்திய விமான படை உபயோகத்திற்கு ஏற்றதாகும்.
இந்த இரு நிறுவனங்களும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள்படி, ஸ்பெயின் நாட்டில் உள்ள தயாரிப்பு மையத்தில் 16 இதே ரக விமானங்களை பறக்க வைத்து சோதனைகள் செய்து, நம் நாட்டிற்கு வந்து விடும். அந்தப் பணிகளில் நமது பொறியாளர்கள் ஈடுபட்டு தயாரிப்பு நுணுக்கங்களை தெரிந்து கொள்வார்கள்.
அதுதவிர 40 அதே ரக விமானங்களை குஜராத்தில் தயாரிக்க துவங்கிட ஒப்பந்தம் உறுதி செய்துள்ளது.
முதல் 16 விமானங்கள் 2025–ல் டெலிவரி கிடைத்துவிடும், மீதி 40–ம் 2031–ல் கிடைத்துவிடும்.
மேலும் நம் நாட்டில் உருவாக்கப்படும் தயாரிப்பு மையத்தில் இருந்து பிற்காலத்தில் ஏர்பஸ் நிறுவனம் ஏற்றுமதி ஆர்டர்களையும் நமக்கு பெற்று தரும் என்று ஒப்பந்தத்தில் இருக்கிறது.
இந்த சி295 ரக விமானம் 1960–களில் நம்மிடமிருந்த ஏவ்ரோ ரக விமானங்களை போல் சிறியது, குறைந்த பயணிகளையும், நிறைய சரக்குகளையும் கொண்டு செல்லும் திறன் பெற்றதாகும்.
வயதாகி, ஓய்வு பெற தயாராகிவிட்ட ஏவ்ரோ ரக விமானங்கம் விடைபெற, சி295 ரக விமானங்கள் நம் மண்ணிலேயே தயாராகிவிடும்.
இந்த சி295 ரக விமானங்களில் பின்புறத்தில் பெரிய கதவுகள் இருப்பதால் பெருவாரியாக ராணுவ சேவைகளுக்கு சரக்குகள் ஏற்றிச்செல்ல உபயோகிக்கப்படுகிறது. ‘பாராசூட்’ வீரர்கள் குறித்து உரிய இலக்கிற்கு செல்ல மிக வசதியான விமானங்கள் ஆகும்.
இந்த ரக விமானங்கள் காட்டுப்பகுதிகள், மலைப்பிரதேசங்களில், கடும் குளிர் நிலவும் பகுதிகளில் ராணுவ சேவைகளுக்கு ஏற்ற விமானங்கள் ஆகும்.
அப்படிப்பட்ட நவீன வசதி கொண்ட விமானத்தை நாமே தயாரிப்பது பெருமைப்பட வேண்டிய செய்தியாகும்.
இது நமது கண்காணிப்பு விவகாரங்களுக்கு மட்டுமின்றி இயற்கை சீற்றம் ஏற்பட்டதால் அங்கு இருந்த மக்களை காப்பாற்றவும் உகந்ததாக இருக்கும்.