டெல்லி, மே 29–
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள எந்த ஆவணங்களும் தேவையில்லை என்ற ரிசர்வ் வங்கியின் அறிவுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வழக்கு தள்ளுபடி
அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள ஒன்றிய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் என்ற அளவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்ள முடியும், அதற்கு அடையாள ஆவணமோ, வேண்டுகோள் சீட்டோ தேவையில்லை. ஒருவர் ஒரு முறைக்கு ரூ.20 ஆயிரம் என்ற அளவில் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.