சென்னை, ஆக. 18–
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது, ரூ. 20 லட்சம் வாடகை தராமல் மோசடி செய்துவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பிரபல இசையமைப்பாளரும் இளையராஜாவின் இளைய மகனுமான யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடைகைக்கு குடியிருந்து வந்தார். 2018 முதல் அங்கு வசித்து வந்த யுவன், கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 20 லட்சம் வாடகை பாக்கி தரவில்லை என உரியமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.
யுவன் மீது புகார்
இதுதொடர்பாக ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், வாடகை பாக்கியை வழங்காமல் யுவன் சங்கர் ராஜா இழுத்தடித்து வந்ததாகவும், போனில் தொடர்பு கொண்டாலும் பதில் அளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாடகை பாக்கி குறித்து பதில் அளிக்காமல், வீட்டை காலி செய்துவிட்டு சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இதுகுறித்து யுவன் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.