போஸ்டர் செய்தி

ரூ.20 கோடியே 33 லட்சம் செலவில் 13 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள்; பள்ளி கட்டிடங்கள்

சென்னை, ஆக.7–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 6–ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்காக 19 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 விடுதிக் கட்டடங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளிகளுக்கான 9 கூடுதல் பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குழந்தைகளும் இடைநிற்றல் இன்றி கல்வி கற்று, சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், அவர்களுக்கு கட்டணமில்லா கல்வி, மதிய உணவு, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா கல்வி உபகரணங்கள் மற்றும் சீருடை, கல்வி ஊக்கத் தொகை வழங்குதல், தங்கிப் பயிலும் விடுதிகள் கட்டுதல் போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அனைத்து வசதிகளுடன்….

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த விடுதிக் கட்டடமானது, 5230 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன், 50 மாணவிகள் தங்கும் வசதியுடன், உணவுக்கூடம், சமையல் அறை, குளியல் மற்றும் கழிவறைக்கூடம், சூரிய மின்சக்தி வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டம்–கும்மிடிப்பூண்டி, விருதுநகர் மாவட்டம் – வத்திராயிருப்பு, விழுப்புரம் மாவட்டம் – சேர்ந்தநாடு, கரூர் மாவட்டம் – தாந்தோன்றிமலை, தேனி மாவட்டம் – மயிலாடும்பாறை, தூத்துக்குடி மாவட்டம் – எட்டயபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் – நெல்லிக்குப்பம், ராமநாதபுரம் மாவட்டம் – மேலாய்குடி ஆகிய இடங்களில் 9 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மாணவ, மாணவியருக்கான 8 விடுதிக் கட்டடங்கள்;

தஞ்சாவூர் மாவட்டம் – குந்தவை நாச்சியார் கல்லூரி, தேனி மாவட்டம் – தேனி, கிருஷ்ணகிரி மாவட்டம் – கிருஷ்ணகிரி, திருவாரூர் மாவட்டம் – நன்னிலம் ஆகிய இடங்களில் 4 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 4 விடுதிக் கட்டடங்கள்;

தருமபுரி மாவட்டம் – வாச்சாத்தி மற்றும் நரிப்பள்ளி, விழுப்புரம் மாவட்டம்- மூலக்காடு மற்றும் கொட்டப்புத்தூர் ஆகிய இடங்களில் இயங்கி வரும் பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகள்; வேலூர் மாவட்டம்– டி.டி. மோட்டூர், திருநெல்வேலி மாவட்டம் – கடம்பன்குளம், திருவள்ளூர் மாவட்டம் – மேலூர், திருவண்ணாமலை மாவட்டம் – களியம், கடலூர் மாவட்டம் – தீவளூர் ஆகிய இடங்களில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் ஆகிய பள்ளிகளுக்கு 5 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 கூடுதல் பள்ளிக் கட்டடங்கள்; என மொத்தம், 20 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 13 விடுதிக் கட்டடங்கள் மற்றும் 9 கூடுதல் பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஒட்டெம் டாய், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் க.வீ.முரளிதரன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சஜ்ஜன் சிங் ஆர். சவான், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் டி.ரிட்டோசிரியாக், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துணைச் செயலாளர் எஸ். செந்தாமரை, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *