செய்திகள்

ரூ.2 1/4 கோடியில் ஆற்றுப்பாலம்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அடிக்கல்

மணப்பாறை அருகே ரூ.2 1/4 கோடியில் ஆற்றுப்பாலம்:

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அடிக்கல்

திருச்சி, ஜூலை.11–

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ரூ. 2.22 கோடியில் ஆற்றுப் பாலம் கட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் எம்எல்ஏ ஆர்.சந்திரசேகர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

மருங்காபுரி வட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆரிக்கோன்பட்டி – திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வண்ணாரப்பட்டி இடையே வேம்பனூரில் அமைந்துள்ள வெள்ளாற்றைக் கடந்து செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தர வேண்டும். இதனால் ஆற்றைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும் என அப்பகுதி மக்கள் மணப்பாறை எம்எல்ஏக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து தமிழக முதல்வரால் கடந்த பேரவைக் கூட்டத்தொடரில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் அமைக்க 110-விதியின் கீழ் ரூ.2 1/4 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் நிலத்தடி நீரைச் சேமிக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.1 கோடியில் தடுப்பணை அமைக்கவும் அரசு நிதி ஒதுக்கியது. அதன்படி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் வேம்பனூர் வெள்ளாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினர். தொடர்ந்து ஆரியகோன்பட்டியில் 2018–-2019 மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.4 லட்சத்தில் கட்டிய நாடக மேடையை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர் கலிங்கப்பட்டி செல்வராஜ், பேரூர் செயலர் திருமலை சுவாமிநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பி.ஆர்.எம். பெருமாள், எம்.ஜி.ஆா் மன்ற இணைச் செயலர் ரெங்கசாமி, ஒன்றியத் துணைச் செயலர் கண்ணூத்து பொன்னுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வேம்பனூர் மாணிக்கம், ஆரிக்கோன்பட்டி ஆறுமுகம் ஆகியோர் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *