செய்திகள் போஸ்டர் செய்தி

ரூ.2 ஆயிரத்துக்கு 27 வகை மளிகை பொருட்கள்: ஓ.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தார்

வீடு தேடி வருகிறது

ரூ.2 ஆயிரத்துக்கு 27 வகை மளிகை பொருட்கள்:

ஓ.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தார்

குலுக்கல் முறையில் தேர்வு பெறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க காசு பரிசு

ரூ.150க்கு காய்கறி தொகுப்பும் வழங்கப்படுகிறது

அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு ஆய்வு செய்தார்

 

தேனி, ஏப்.2–

ரூ.2 ஆயிரத்துக்கு அரிசி, பருப்பு, எண்ணை உட்பட 27 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வீடு தேடி வினியோகம் செய்யும் திட்டத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று துவக்கிவைத்தார்.

தேனி- அல்லிநகரம் நகராட்சி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சந்தையில் மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமரர் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகத்தின், கொரோனா காய்ச்சல் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வீடு தேடிவரும் மளிகைப் பொருட்கள் குலுக்கல் முறையில் தேர்வுபெறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒரு பவுன், அரை பவுன், கால் பவுன் தங்கக்காசு பரிசுத்திட்டத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கிவைத்து பேசியதாவது:

கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுக்கும் விதமாக சமூக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின் போில் தேனி மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 144-இன் கீழ் ஊரடங்கு உத்தரவு கடந்த 24–ந் தேதி மாலை 6 மணி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு (இன்று 1.4.2020 முதல்) மீண்டும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே இந்நோய் தாக்குதலை தவிர்க்க இயலும். மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் பொருட்டு வெளியில் வருவதால் நோய்தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வது அரசின் கடமையாகும். அதனை செயல்படுத்தும் விதமாக தரமான பொருட்கள் நியாயமான விலையில் பல்வேறு பகுதிகளில் அவரவர் வீடுதேடி பொருட்களை கொண்டு சேர்க்க வசதியாக 7 சிறியரக சரக்கு வாகனங்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

27 மளிகை பொருட்கள்

பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான மளிகைப் பொருட்களை நியாயமான விலையில் தங்களின் வீடுதேடி வழங்கும் அடிப்படையில், ஒரு குடும்பத்திற்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பான, பொன்னி அரிசி- 10 கிலோ, இட்லி அரிசி- 5 கிலோ, துவரம் பருப்பு -1 கிலோ, உளுந்தம்பருப்பு- 1 கிலோ, பாசிப்பருப்பு -200 கிராம், புளி -250 கிராம், கோதுமை மாவு- 1 கிலோ, மஞ்சள்தூள் -100 கிராம், கல்உப்பு- 1 கிலோ, தூள் உப்பு -1 கிலோ, சர்க்கரை -1 கிலோ, கடலைப் பருப்பு -200 கிராம், பட்டாணி -200 கிராம், சுண்டல்- 200 கிராம், சீரகம் -100 கிராம், மிளகு -100 கிராம், கடுகு- 100 கிராம், மிளகாய் வத்தல் -250 கிராம், மிளகாய் தூள்- 100 கிராம், பெருங்காயம்- 50 கிராம், மல்லித்தூள் -100 கிராம், சாம்பார்பொடி -100 கிராம், வெந்தயம் -100 கிராம், சோம்பு -50 கிராம், தேங்காய் எண்ணெய்- 100 மி.லி, நல்லெண்ணெய்- 500 மி.லி, சன்பிளவர் எண்ணெய்-1லிட்டர் போன்ற 27 மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பு மற்றும் தேவையான பொருட்கள் குறிப்பட்ட அளவில் தோராயமாக ரூ.2000 மதிப்பில் வாங்கி கொள்ளலாம்.

மளிகைப்பொருட்கள் தேவைப்படுவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சேவை மைய வாட்ஸ் அப் அலைப்பேசி எண்கள்- 7548857532, 9585350940, 9487644135 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பொருட்களை தெரிவிக்கலாம்.

குலுக்கலில் தங்க காசு பரிசு

இத்தொகுப்புத் திட்டத்தில் கூடுதல் பயனாக ரூ.2000 மளிகை பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு, வீடுதேடி பொருட்களை வழங்கும் பணியாளர்கள் மூலம் பரிசு கூப்பன் வழங்கப்படும். அதிலுள்ள அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்து அதே பணியாளரிடம் வழங்கிட வேண்டும். ரூ. 2000- மதிப்புக்கு குறைவாக பொருட்கள் வாங்கு பவர்களுக்கும் வீடுதேடி பொருட்கள் வழங்கப்படும். பொருட்கள் வேண்டி தகவல் தெரிவித்த மறுநாள் இப்பொருட்கள் வீட்டில் வந்து வழங்கப்படும். இம்மாத இறுதியில் குலுக்கல் நடைபெற்று, தேனி, பெரியகுளம், போடிநாயக்கனூர், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் மற்றும் ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் தோ்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு தலா 1 பவுன், அரை பவுன் மற்றும் கால் பவுன் தங்கக்காசு பரிசாக வழங்கப்படும்.

எனவே, விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு என்ற நன்மைபயக்கும் சொல்லுக்கேற்ப கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுக்கும் விதமாகவும் சமூக தனிமைப்படுத்துதலை கடைபிடிக்கும் விதமாகவும் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த நல் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.150க்கு காய்கறி தொகுப்பு

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா காய்ச்சல் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையில் ஒன்றாக பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரூ. 150 மதிப்பிலான காய்கறித் தொகுப்பு பையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு வழங்கினார்.

அம்மா உணவகத்தில் சாப்பிட்டு ஆய்வு

பின்னர் தேனி மற்றும் போடிநாயக்கனூர் அம்மா உணவகத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தேனி அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்து துணை முதலமைச்சர் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் அம்மா உணவகத்தில் காலை சிற்றுண்டி அருந்தினர். துணை முதலமைச்சர், போடி அம்மா உணவகத்தில் உணவருந்திய வயதான தாய்மார்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் கொரோனா காய்ச்சல் தடுப்பு குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *