புதுடெல்லி, ஜூலை 2–
ரூ.1,853 கோடி மதிப்பிலான பரமக்குடி– ராமநாதபுரம் 4 வழிச்சாலை கட்டுமானத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்காக பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 4 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதில் ஒன்று, தேசிய விளையாட்டுக்கொள்கை–2025. 2–வது ரூ.1 லட்சம் கோடி நிதியுடன் கூடிய ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமை (ஆர்.டி.ஐ.) திட்டம். 3–வது வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம். 4–வது பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை 4 வழிச்சாலை கட்டுமான திட்டம்.
இந்த 4 திட்டங்களுக்கும் வழங்கப்பட்ட ஒப்புதல் குறித்து ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாட்டுக்கு 4 வழிச்சாலை திட்டத்துக்கான ஒப்புதல் கிடைத்து உள்ளது. தற்போது இந்த சாலை மதுரையில் இருந்து பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதனோடு தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகள் இணைந்த இருவழி சாலையாக உள்ளது. இனி இது 4 வழி தேசிய நெடுஞ்சாலையாக பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை 46.7 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,853.16 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இந்த விரிவாக்க சாலை 5 தேசிய நெடுஞ்சாலைகள், 3 மாநில நெடுஞ்சாலைகள், மதுரை, ராமேசுவரம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள், பாம்பன், ராமேசுவரம் ஆகிய 2 சிறு துறைமுகங்களை இணைப்பதாக இருக்கும்.
இதன் மூலம் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், சுற்றுலா, ஆன்மிகம், கலாச்சாரம் போன்றவை மேம்படும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இந்த திட்டத்தின் மூலம் 8.4 லட்சம் மனித வேலைநாட்கள் நேரடியாகவும், 10.45 லட்சம் மனித வேலைநாட்கள் மறைமுகமாகவும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
எடப்பாடி நன்றி
இந்த திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
பரமக்குடி–ராமநாதபுரம் இடையிலான NH87 நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
ரூ.1,853 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் இந்த வழித்தட மேம்பாட்டு திட்டமானது, பயண நேரத்தை குறைத்து, பயணப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், தென் தமிழகத்தில் குறிப்பாக ராமேஸ்வரம் புனித யாத்திரைப் பகுதியில் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பெரிதும் ஊக்கப்படுத்தும். தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் பிரதமர் மோடிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி கூறியுள்ளார்.