போஸ்டர் செய்தி

ரூ.17 கோடி செலவில் அதிநவீன திருமண மண்டபம்; எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை, ஜன. 11–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இடத்தில் 16 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதிநவீன திருமண மண்டபம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், சோமாசிபாடி, அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக்கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், 36 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள திருமண மண்டபங்கள், யாத்ரி நிவாஸ்கள், ஓய்வுக்கூடம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்ப் பண்பாட்டின் பெட்டகமாகவும், ஆன்மீகத்தின் இருப்பிடமாகவும், கலைத்திறனின் நிலைக்களமாகவும் விளங்குகின்ற திருக்கோயில்களின் சொத்துக்களைப் பாதுகாத்து பராமரிப்பது, அன்றாட பூஜைகள் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்வது, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்ற பணிகளை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை மூலமாக முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

1000 இருக்கைகள்

அந்த வகையில், சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இடத்தில் 2.447 ஏக்கர் பரப்பளவில், தரைத்தளத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 475 இருக்கைகள் கொண்ட உணவு அருந்தும் இடம், முதல் தளத்தில் 1000 இருக்கைகள் கொண்ட திருமண நிகழ்ச்சிக்கூடம், 80 இருக்கைகள் கொண்ட முக்கிய பிரமுகர்கள் உணவு அருந்தும் இடம், 14 தங்கும் அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன், 16 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதிநவீன திருமண மண்டபம்;

அன்னதானக் கூடம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான சோமாசிபாடி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 244.94 சதுர மீட்டர் பரப்பளவில், சுமார் 50 சேவார்த்திகள் உணவு உட்கொள்ளும் வசதியுடன் 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம்; என மொத்தம் 17 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திருமண மண்டபம் மற்றும் அன்னதானக் கூடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அடிக்கல்

மேலும், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், புதுக்காமூர் அருள்மிகு புத்திரகாமேஸ்வரர் திருக்கோயிலில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கீழ்பென்னாத்தூர் வட்டம், வேட்டவலம், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ள திருமண மண்டபங்கள், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலில் 6 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் 24 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ள யாத்ரி நிவாஸ் கட்டடங்கள், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் 1 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஓய்வுக் கூடம் ஆகிய கட்டடங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், ஊரக தொழில்துறை அமைச்சர் பா. பென்ஜமின், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர், ஆணையர் தா.கி.ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருமண மண்டபத்தில் உள்ள வசதிகள்

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆர்.ஏ.புரத்தில் கதவு எண்.1, பசும்பொன் முத்துராமலிங்கம் சாலையில் 68 ஆயிரத்து 272 சதுர அடி பரப்பளவில் திறக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்தில் உள்ள வசதிகள்:–

6 நபர்கள் செல்லும் மின் தூக்கி இரண்டும், 15 நபர்கள் செல்லும் மின்தூக்கி, ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் 63 நிறுத்திடவும், இரு சக்கர வாகனங்கள் 63 நிறுத்திடவும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் ஜெனரேட்டர், கண்காணிப்புக் காமிரா வசதி, தீயணைப்பு கருவிகள் ஆகியவற்றுடன் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *