போஸ்டர் செய்தி

ரூ.12.70 கோடியில் 5 வட்டாட்சியர் அலுவலக கட்டிடம், குடியிருப்புகள்: எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை, ஜன.14–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 14 கோடியே

60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக, கூடுதல் கட்டடம் மற்றும் இதர அரசு துறைகளுக்கான அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆவடி, ஸ்ரீமுஷ்ணம், கும்பகோணம், பாபநாசம், மானூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

முதலமைச்சர் 11.7.2017 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் இந்து அறநிலையத் துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, பட்டு வளர்ச்சித் துறை, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக கிளை அலுவலகம், கல்வித் துறை அலுவலகங்கள், பால்வளத் துறை, குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகம் மற்றும் உள்ளாட்சி நிதித்தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகம் ஆகிய அரசுத் துறை அலுவலகங்கள் பல்வேறு இடங்களில் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. மேற்கண்ட அலுவலகங்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலேயே செயல்பட கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 7,122 சதுர மீட்டர் கட்டட பரப்பளவில், 14 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடம் மற்றும் இதர அரசு துறைகளுக்கான அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

வட்டாட்சியர் அலுவலகங்கள்

மேலும், திருவள்ளூர் மாவட்டம் – ஆவடி, கடலூர் மாவட்டம் – ஸ்ரீமுஷ்ணம், தஞ்சாவூர் மாவட்டம் – கும்பகோணம் மற்றும் பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம் – மானூர் ஆகிய இடங்களில் 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையர் / முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *