செய்திகள் போஸ்டர் செய்தி

ரூ.12.58 கோடி செலவில் சார்பதிவாளர் அலுவலக கட்டடங்கள்: எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்

சென்னை, ஜூலை 31–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (31–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் 12 கோடியே 57 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அம்பத்தூர் மற்றும் கொன்னூர், சுங்குவார்சத்திரம், கடையநல்லூர், ராதாபுரம், தாமரைப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், திருப்பூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம், சென்னை – பதிவுத்துறைத் தலைவர் அலுவலக இணைப்புக் கட்டடம் மற்றும் பாலக்கோடு வணிகவரி அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகங்களில், ஆவணங்களைப் பராமரிப்பதற்கும், போதிய இடவசதி இல்லாததை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்ற வணிகவரி மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தக்க வசதிகள் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருதியும், வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அனைத்து வணிகவரி மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டடங்கள் கட்டும் திட்டத்தினை அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், பதிவுத் துறை சார்பில் வட சென்னை பதிவு மாவட்டத்தில் 1 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்பத்தூர் மற்றும் கொன்னூர் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், செங்கல்பட்டு பதிவு மாவட்டத்தில் 94 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம், தென்காசி பதிவு மாவட்டத்தில் 87 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடையநல்லூர் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம் மற்றும் திருநெல்வேலி பதிவு மாவட்டத்தில் 85 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம், மதுரை (வடக்கு) பதிவு மாவட்டத்தில் 89 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாமரைப்பட்டி சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்;

திருப்பூர்

திருப்பூரில் 1 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருப்பூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம், சென்னையில் உள்ள பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் 3 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இணைப்புக் கட்டடம்;

வணிகவரித் துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் 1 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலக்கோடு வணிகவரி அலுவலகக் கட்டடம்; என மொத்தம் 12 கோடியே 57 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை கட்டடங்களை திறந்து வைத்தார்.

பணி நியமன ஆணை

பதிவுத் துறையில் 2018–19 மற்றும் 2019–2020ம் ஆண்டுகளுக்கான 143 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், பதிவுத் துறை தலைவர் பி. ஜோதி நிர்மலாசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *