‘டாஸ்மாக்’ அதிகாரிகள் 3 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன்
சென்னை, ஏப்.25-
ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கில் ‘டாஸ்மாக்’ அதிகாரிகள் 3 பேருக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ நிறுவனம் மதுபானங்கள் கொள்முதல் செய்யும் ஆலைகள், நிறுவன அலுவலகங்கள், எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 3 நாட்கள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை தரப்பில் செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதில் ‘டாஸ்மாக்’கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 முதல் ரூ.30 வரை வசூல் செய்தது. ‘டாஸ்மாக்’ அதிகாரிகளுக்கு மது ஆலைகளுடன் நேரடி தொடர்பு இருந்தது. கொள்முதலை குறைத்து காட்டியது. பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டன. டாஸ்மாக் உயர் அதிகாரிகள் நெருக்க மானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதுபோல பல முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் வராத பணம் புழங்கி இருக்கிறது’ என்று அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல் இடம் பெற்றது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் அரசு நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரியும், இந்த சோதனையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட கோரியும் தமிழக அரசின் உள்துறை செயலாளர், ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் ஆகியோர் சார்பில் தனித்தனி வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில், அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டு களுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். எனவே சோதனையின் அடிப்படை யில் அமலாக்கத்துறை சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கலாம்’ என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசார ணைக்கு ஐகோர்ட் பச்சை கொடி காட்டி உள்ள நிலையில் அமலாக்கத்துறை உடனடி மேல் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் விசாகன், பொதுமேலாளர்கள் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகிய 3 பேருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.