செய்திகள் நாடும் நடப்பும்

ரூ.100 லட்சம் கோடி ‘கதி சக்தி’ உத்வேகம்


தலையங்கம்


நாட்டின் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது அறிந்ததே.

2019ல் நமது பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவேன், அதுவும் ஐந்தே ஆண்டுகளில் என்று முழங்கினார்.

இம்முறை சுதந்திர தின உரையில் ‘உத்வேகம்’ அதாவது இந்தியில் ‘கதி சக்தி’ என்ற வியூகத்தை அறிவித்திருந்தார், அதற்கான முதல் கட்டத் திட்டங்களை சென்ற வாரம் மக்கள் முன் வைத்துள்ளார்.

‘உத்வேக திட்டம்’ என்பதன் அடிப்படை திட்டமே ரெயில்வே, சாலை போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து ஆகிய முன்னணி அடிப்படை கட்டமைப்புத் துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட வைத்து நிலுவையில் உள்ள பல்வேறு கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு ஊக்கம் தர இருக்கிறார்கள்.

இப்படி இணைந்து செயல்பட வைக்க கணினி யுக சேவைகள், செயற்கை கோள் தரவுகள், பெரும் தரவு அதாவது பிக் டேட்டா ஆகியவற்றை கொண்டு பெரிய நிறுவனங்கள் செயல்படுவது போல் நாட்டின் வலிமை மிக்க அரசு நிறுவனங்களையும் வளர்ச்சிப் பாதையில் மிடுக்காக பணியாற்ற புதிய திட்டமாக பிரதமர் மோடி இந்த நவயுக கருவிகள் கொண்டு எல்லாத் துறைகளையும் மேம்பட வைக்கப் போகிறார். அதற்காக ரூ.100 லட்சம் கோடியையும் விசேஷமாக ஒதுக்கியுள்ளார்.

நாடெங்கும் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நிதி பற்றாக்குறை காரணமாக செயல் வடிவம் பெற முடியாமல் துவங்கப்பட்டு அப்படியே அரைகுறையாக இருப்பதை அறிவோம்.

சென்னைவாசிகளுக்கு கண் முன் இருக்கும் மதுரவாயல் – துறைமுகம் மேம்பால பணிகள் பல ஆண்டுகளாக முழுமை பெறாமல் இருப்பதை அறிவோம்.

மும்பையில் பல்வேறு மேம்பால பணிகள், ரெயில்வே நிலத்தில் பாதசாரிகள் உபயோக கட்டுமானங்கள், டெல்லி – மீரட் அதிவேக சாலை திட்டம் என கிட்டத்தட்ட 1799 மெகா திட்டங்கள் ஆமை வேகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறதாம். அதில் 559 திட்டங்கள் காலதாமதமாகி விட்டதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மேலும் 950 திட்டங்களுக்கான காலக்கெடு வெளியிடப்படாத நிலையில் இருக்கிறது.

இதுபோன்ற திட்டங்களை மீண்டும் கால விரயத்துக்குப் பிறகு துவக்கிட வேண்டிய நிதி அளவு ரூ.4.5 லட்சம் கோடியாம்.

பிரதமரின் ‘உத்வேக’ திட்டத்தின் கிழ் 16 அமைச்சகங்கள் கைகோர்த்து செயல்பட இருக்கிறது.

மேலும் இதுபோன்ற மெகா திட்டங்கள் பற்றி எல்லா தகவல்களையும் வெளியிட வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

இந்த 2 செயல்திட்டங்களையும் வெளிப்படுத்தும் துறையாக ‘கதி சக்தி’ இயங்கும். அதற்காக பிரத்தியேக வலைதளமும் உருவாக்கப்படும்.

கொரோனா பெரும் தொற்று ஏற்படுத்திய பெரும் பாதிப்பு சர்வநாசத்தால் பொருளாதாரத்திற்குத் தான். பெரும் பாதிப்பு ஊழியர்களுக்குத்தான் என்பதையெல்லாம் மனதில் கொண்டு ‘கதி சக்தி’ திட்டத்தை அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.

வசீகரமான பெயரிட்டு திட்டத்தை அறிவிப்பதில் மோடி வல்லவர்! அதே வேகத்துடன் நாடெங்கும் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களையும் முழுமை பெற வைத்தால் மிக அவசியமான போக்குவரத்து கட்டமைப்பு பரபரப்பாக செயல்பட வைத்து விடலாம். வேலைகள் பரிபோன நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் பல லட்சம் பேரின் குடும்பத்தையும் ஆரோக்கியமாக வாழ வழி கிடைக்கும்!

நிலுவையில் உள்ள பல்வேறு பெருந்திட்டங்களையும் முழுமை பெறச்செய்யும் நாளை எண்ணி நம்பிக்கையோடு காத்திருப்போம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *