போஸ்டர் செய்தி

ரூ.10 கோடியில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம்; எடப்பாடி பழனிசாமி திறந்தார்

சென்னை, ஜன.11–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், எடயாத்தூர் ஊராட்சியில், பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலத்தினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், சென்னை, மதுரவாயலில் 6 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தையும், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், கல்லக்குடி வைப்பம் சாலையில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார். 1 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம், காஜாமலை பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருக்காக கட்டப்படவுள்ள குடியிருப்பு கட்டடம் மற்றும் அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், சுத்தமல்லி வடகடல் சாலையில் கட்டப்படவுள்ள உயர் மட்ட பாலம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரவசதிகள், சாலை வசதிகள், பாலங்கள் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், உள்ளாட்சி அமைப்புகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதத்தில், பழுதடைந்த ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களுக்குப் புதிய கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடுஅரசு செயல்படுத்தி வருகிறது.

பாலாற்றின் குறுக்கே பாலம்

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம், எடயாத்தூர் ஊராட்சியில், பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தார். இப்புதிய பாலம் திறக்கப்பட்டதன் மூலம், விளாகம், பாண்டூர், எடயாத்தூர், சின்னஎடயாத்தூர், இரும்புலிச்சேரி, அட்டவட்டம், நெரும்பூர், நல்லாத்தூர் மற்றும் லத்தூர் ஆகியபகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடைவதோடு, சுமார் 20 கிலோ மீட்டர் பயண தூரமும் குறைகிறது.

அடுக்குமாடி குடியிருப்பு

மேலும், சென்னை, மதுரவாயலில் 6 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களுக்காக கட்டப்பட்டுள்ள 12 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம், அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சிஒன்றியம், கல்லக்குடி – வைப்பம் சாலையில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுபாலம் என மொத்தம் 17 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைதிட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அடிக்கல்

திருச்சி மாவட்டம், காஜாமலை பகுதியில் 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருக்காக கட்டப்படவுள்ள குடியிருப்பு கட்டடம் மற்றும் அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், சுத்தமல்லி – வடகடல் சாலையில் 1 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உயர் மட்ட பாலம் ஆகியவற்றிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு 50 புதிய ஜீப்புகள் வழங்கப்படும் என்று 2018–19–ம் ஆண்டின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

ஜீப்புகள்

அதன்படி, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மாவட்டதிட்ட இயக்குனர்களுக்கு 13 ஜீப்புகள், செயற்பொறியாளர்களுக்கு 2 ஜீப்புகள், உதவி இயக்குநர், உதவிதிட்டஅலுவலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மற்றும் உதவிசெயற்பொறியாளர்களுக்கு 32 ஜீப்புகள், வட்டாரவளர்ச்சி அலுவலர்களுக்கு 3 ஜீப்புகள், என மொத்தம் 3 கோடியே 20 லட்சத்து 62 ஆயிரத்து 488 ரூபாய் மதிப்பீட்டிலான 50 ஜீப்புகளை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக, 7 ஓட்டுநர்களுக்கு ஜீப்புகளுக்கான சாவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பணிநியமன ஆணை

ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேக்கநிலைப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்ட உதவிப் பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு பணி நியமனஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 நபர்களுக்கு உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்தநிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள்செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரகத் தொழில்துறைஅமைச்சர் பா.பென்ஜமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கா.பாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *