சிறுகதை

ரீசார்ஜ் கொரோனா | ராஜா செல்ல முத்து

Spread the love

பரபரவென இயங்கிக் கொண்டிருந்த சென்னை மாநகரம் தொற்று வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கைப் பிறப்பித்ததன் விளைவாக வெறிச்சாடிக் கிடந்தது தெருக்கள், வீதிகள். சாலைகள். ஒரு நாள் ஊரடங்கு முடிந்து.

மறுநாள் ஓரளவுக்கு இயங்க ஆரம்பித்தது கடைகள்.

அடிக்கடி இயங்காத பேருந்துகள் அவ்வப்போது வந்து போயின.

பாஸ்கர் வேகவேகமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான்.

‘நேத்து ஊரடங்கு இன்னைக்கு பஸ் இருக்குமா..? கடைகள் திறந்திருக்குமா..?’ என்ற அச்சத்தில் கிளம்பிக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

வழக்கம் போல் வெளியேறி வெளியே வந்தான்.

முன்பிருந்ததை விட கூட்டம் ரொம்பவே குறைவாக இருந்தது. ஆள் நடமாட்டம் முன்னைப்போல இல்லை என்பது அவன் பார்த்த போதே தெரிந்தது. ஆங்காங்கே சில வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனாலும் கூட்டம் மட்டும் பேருந்து நிலையத்தில் குறையாமலே இருந்தது.

‘ கூட்டம் கூடாதீங்கன்னு சொன்னா.. கொஞ்சங்கூட கேக்காம இப்பிடி கூடி நின்னுட்டு இருக்காங்க.. எல்லாத்துக்கும் நோயெதிர்ப்பு சக்தி ஜாஸ்தி போல..’ என்று நினைத்த பாஸ்கர் கூடி நின்ற கூட்டத்தை விட்டுக்கொஞ்சம் தள்ளியே நின்றான்.

‘நச்.. நச்..’ என்று சிலர் தும்ம தும்மியவர்களை கொலைவெறியோடு பார்த்தனர் அங்கு கூடியிருந்த கூட்டத்தினர்.

‘அடேய்.. தும்முனது தப்பாடா.. ஏண்டா.. இப்பிடி கொல வெறியோட பாக்குறீங்க..?’ என்று தும்மியவர்கள் பார்த்தனர்.

தூரமாய் ஒரு பேருந்து தென்பட்டது . அதை நோக்கி எல்லோரும் ஓடினர்.

‘ஆஹா.. என்ன இது.. இவ்வளவு ஆளுகளும் ஒரே பஸ்ஸ நோக்கி ஓடிட்டு இருக்காங்க.. எவருக்கும் கொரானோ பத்தின பயமே.. இல்லையா..!’’ என்ற பாஸ்கர் பஸ்ஸில் ஏறாமல் கொஞ்சம் விலகியே நின்றான்.

‘போகட்டும் அத்தனை பேரும் போயிட்டாங்கன்னா.. அடுத்த பஸ் பிரியா இருக்கும்..’ என்ற எண்ணத்தோடு நின்றான் .அந்த பஸ்ஸில் ஏறிய நிறையப்பேர் மாஸ்க் போட்டிருந்தனர். சிலர் கைக்குட்டையை முகத்தில் கட்டியிருந்தனர்.

‘பரவாயில்ல.. கொஞ்சப் பேருக்கு ஒரு பாதுகாப்பு இருக்கு..’ என்று எண்ணிய படியே நின்று கொண்டிருந்தவனின் செல்போன் சிணுங்கியது.

‘‘ஹலோ.. யார்.. பேசுறது..?’’ என்று பாஸ்கர் கேட்டான்.

‘‘நான் பிரியா பேசுறேன்..’’ என்று எதிர் திசையிலிருந்து குரல் வந்தது.

‘‘ம்ம்.. சொல்லு.. ஏன் உன் போன் என்னாச்சு..?’’ என்றான் பாஸ்கர்.

‘‘என் போன்ல.. பேலன்ஸ் இல்ல.. அதனால தான் என் பிரண்டோட போன்ல் இருந்து பேசிறேன்…நீ.. எனக்கு ரீசார்ஜ் பண்ணு..?’’ என்று கொஞ்சம் கூட கேப் விடாமல் போசினாள் பிரியா.

‘‘என்னது ரீசார்ஜா..?’’

‘‘ஆமா..அதுக்கு ஏன்..? இவ்வளவு அதிர்ச்சியா கேட்குறே..!’’

‘‘ஏய்.. இங்க கடைகளே இல்ல..’’

‘‘ஏன்..?’’ என்று எதிர் கேள்வி கேட்டாள் பிரியா.

‘‘ஏன்னா..? கொரானோ.. அது தான் கடைகள் எல்லாம் அடச்சு வச்சுருக்காங்க.. என்னைய கேட்டா எப்படி..?’’ என்று பாஸ்கர் கேட்டான்.

‘‘நீயெல்லாம்.. ஒரு ஆளு. உன்கிட்ட போயி.. ஒரு உதவி கேட்டனே..’’ என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்ட ஆரம்பித்தாள்.

‘‘ஏய்.. நீயென்ன லூசா.. இங்க கடை இல்லன்னு சொல்றேன்.. நீ பாட்டுக்கு பேசிட்டு இருக்க..?’’ என்று பாஸ்கரும் தன் பங்குக்குப் பேசினான்.

‘‘நீ.. என்ன சம்பாதிக்கிற..? ஒன்னோட மாச சம்பளம் எவ்வளவு..? சம்பாரிக்கிற பணத்தையெல்லாம் என்ன பண்ற..? தெருவில சின்னக் கடை வச்சுருக்கிறவங்க கூட டெய்லி ரெண்டாயிரம்.. மூவாயிரம் ..சம்பாதிக்கிறாங்க.. ஆனா நீ.. என்னடான்னா.. ஒரு ரீசார்ஜ் பண்றதுக்கு இவ்வளவு யோசிக்கிற..’’ என்று மறுபடியும் கண்டபடி திட்ட ஆரம்பித்தாள் பிரியா.

‘‘ஏம்மா.. இங்க கடைகள் இல்லன்னு சொன்னேன்.. அதக்கூட நீ புரிஞ்சுக்கிறாம.. ஒம்பாட்டுக்கு இப்பிடி திட்டிட்டு இருக்கியே..’’என்று பாஸ்கர் பரிதாபமாய் பேசினான்.

‘‘வில்லேஜ்ல இருக்கேன்.. இங்க கடைகள் எதுவும் தெறக்கல.. சரி சென்னையில் எங்கேயாவது ஒரு இடத்தில கடை தெறந்திருக்கும்னு நினைச்சு ஒரு உதவி கேட்டா செய்ய மாட்டேங்கிறியே..’’ என்று மறுபடியும் சலித்துக்கொள்ள ஆரம்பித்தாள் பிரியா.

‘‘இங்க எந்த இடத்திலும் கடைகள் எதுவும் திறக்கலம்மா..’’ என்று பாஸ்கர் சொல்வதை அவள் காதில் வாங்கவே இல்லை.

‘‘நீ..எந்த இடத்துக்கும் போயி பாக்காம ஏதாசுச்சும் சாக்கு சொல்லு..இந்தப்பொழப்பு பொழைக்கிறதுக்கு.. பிச்சை எடுக்கலாம்..’’ என்று மீண்டும் பேச ஆரம்பித்தாள் பிரியா.

‘இதுயென்ன கொடுமை.. கடை திறக்கலைன்னா.. நம்மள ஏன்.. இந்தக்கிழி கிழிக்கிறா..’ என்று பாஸ்கர் நினைத்த போது மறுபடியும் திட்ட ஆரம்பித்தாள் பிரியா.

‘‘ஏம்மா.. இங்க.. என்ன நிலவரம்னு தெரியாம ஒம்பாட்டுக்கு பேசிட்டே இருக்கியே..’’ என்று பாஸ்கர் வாயெடுத்துப் பேசுவதற்குள்

‘‘இனிமே.. எனக்கு போன் பண்ணுன …….. பிஞ்சு போகும்..’’ என்று கடுமையான கோபத்தில் பேசினாள் பிரியா.

‘ஏன்.. நாம பேசுறத இந்தப்பொண்ணு புரிஞ்சுக்கிற மாட்டேங்குது.. கண்ணுக்குத் தெரியாத வைரஸூம் கண்ணுக்குத் தெரியாத உண்மைகளும் நெறயப்பேருக்கு சந்தேகம் தான் ஏற்படுத்தும்..பிரியா கூட அப்பிடித்தான் நினைச்சிட்டா போல..’ என்று பாஸ்கர் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவன் செல்ல வேண்டிய பேருந்தும் வந்தது.

கூடவே பிரியாவின் போன் காலும் வந்துகொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *