நாடும் நடப்பும்

ரியோவில் தங்கம், டோக்கியோவில் வெள்ளி: தொடர் வெற்றியில் உயரம் தாண்டும் மாரியப்பன்

பாரா ஒலிம்பிக்கில் 10 பதக்கங்கள்: அபார சாதனையாளர்களை நாடே பாராட்டுகிறது


ஆர். முத்துக்குமார்


ஒலிம்பிக்கில் சாதிப்பது என்பது அரிய சாதனையாகும். அதில் ஈட்டி எரிதலில் நீரஜ் சோப்ரா ஜப்பானில் பெற்றுத்தந்த தங்கம் எல்லையில்லா ஆனந்தத்தை தந்தது. இன்று இந்திய விளம்பர துறை மூலம் அனைவர் மனதிலும் அந்த இளைஞன் சிறப்பான இடத்தை பிடித்துவிட்டார்.

அந்த தங்கத்தை பெற அவரது கடுமையான பயிற்சியும், கடும் உழைப்பும் இன்று அவருக்கு இத்தனை வசதி வாய்ப்புகளை வீடு தேடி வர வைத்துள்ளது.

மாரியப்பன் தங்கவேலு

அண்மையில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கமும், ஷரத்குமார் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா இரட்டை இலக்கத்தை எட்டியது.

ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி 42 பிரிவில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ஷரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாட்டின் மாரியப்பன் பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். கடந்த 2016-ம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்ஸில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரியோவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாம் க்ரூ, இம்முறை மாரியப்பனுக்கு கடும் சவால் அளித்தார்.

1.88 மீட்டர் உயரத்தை மாரியப்பன் தனது 3 முயற்சிகளிலும் தாண்டத் தவறினார். அதேவேளையில் சாம் க்ரூ முதல் இரு முயற்சியில் தவறவிட்டாலும் கடைசி முயற்சியில் தாண்டி தங்கத்தை தட்டிச் சென்றார்.

அட தங்கத்தில் ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ? ஆனால் தன் அங்க குறைபாடுகளை எல்லாம் மீறி சாமானியனால் எட்ட முடியாத உயரத்தை தாண்டியுள்ள அந்த தங்க மகன் மாரியப்பன், இம்முறை வெள்ளிப் பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்ததை எண்ணி வருந்துவது, நம் கண்களைக் கசிய வைக்கிறது.

‘எப்படியும் இம்முறையும் தங்கம் பெற கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன், அதே நோக்கத்தோடு டோக்கியோ வந்தேன். தொடர்ந்து இரண்டாவது முறையும் தங்கம் வென்றால் அது உலக சாதனை என்பதால் உறுதியாக இருந்தேன்’ என்று கூறுகிறார்.

நனைந்த சாக்ஸ்

மேலும் அவர் கூறும்போது, இறுதி போட்டி நாளில் மழை பெய்து இருந்ததால், சற்றே பயத்துடன் ஓடி வந்து லாவகமாக குதிப்பதில் சிறு பிழை ஏற்பட்டதால் நான் தங்கத்தை கோட்டை விட்டுவிட்டேன். நனைந்த சாக்ஸ் அணிந்த கால்களுடன் ஓடி வந்து தாவிய லாவகம் மாரியப்பன் தங்கவேலுவிற்கு தனது இலக்கை எட்டுவதில் சிரமம் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் இனியும் தாமதிக்காமல் நாடே மாரியப்பனின் வெற்றியை கொண்டாட வேண்டும்.

பிரதமர் மோடியும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் மனம் திறந்து பாராட்டியுள்ளனர். அத்தோடு நின்று விடாமல் முதலமைச்சர் ஸ்டாலின் 2 கோடி ரூபாய் ரொக்கப் பரிசையும் அறிவித்துள்ளார். வெண்கலப் பதக்கம் வென்றுள்ள ஷரத் குமார், சிங்ராஜ் அதனா ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஆகஸ்ட் 31 அன்று மட்டும் இந்தியா 1 வெள்ளி, இரு வெண்கலம் வென்றது. இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை எட்டியது. இதுவரை இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 10 பதக்கங்கள் கைப்பற்றி பதக்க பட்டியலில் 30-வது இடத்தில் உள்ளது.

ஸ்டாலின் ரூ.2 கோடி

முதலமைச்சர் ஸ்டாலின் மாரியப்பனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது வாழ்த்தை கூறியதுடன் ரொக்கப் பரிசாக ரூபாய் 2 கோடி தருவதையும் கூறியிருப்பது பாராட்டுக்குரியது. நீரஜை முன்னிறுத்தி விளம்பரங்கள் தயாராகிக் கொண்டு இருப்பதை அறிவோம். அந்த தங்க மகனுக்கு உரிய வரவேற்பு சரிதான்.

ஆனால் பாரா ஒலிம்பிக் வெற்றியாளர்கள் எதிலும் சளைத்தவர்கள் கிடையாது. ஸ்டேடியங்களில், விளையாட்டு வகுப்பு நேரத்திலும் அவர்களது சாதனைகள் தமிழ்நாடு எங்கும் எதிரொலிக்க செய்தாக வேண்டும்.

விளம்பரம் செய்யும் நிறுவனங்களை யாரை வைத்து விளம்பரப்படுத்துவது என்று எவராலும் கட்டளையிட முடியாதுதான். ஆனால் இந்த சாதனை சக்கரவர்த்திகளை விளம்பரப்படுத்தி எல்லோர் மனதிலும் இடம் பிடிக்க வைத்தால் அதுவே வரும் தலைமுறை தங்களது இலக்குகளை நோக்கிய புதிய உச்சத்துக்கு ஊக்க டானிக்காக இருக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *