செய்திகள்

ரிசார்ட், விடுதிகளில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை: செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் அறிவிப்பு

செங்கல்பட்டு, டிச.27–-

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட், விடுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவும், கடற்கரையில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை பண்ணை வீடுகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து அவற்றின் இயக்குனர்கள், உரிமையாளர்களை அழைத்து தனியார் ஓட்டல் ஒன்றில் காவல் துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

-கொரோனா வைரசின் இன்னொரு அலை தற்போது இங்கிலாந்தில் வேறு வைரஸ் ரூபத்தில் பரவிவருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த புத்தாண்டு அன்று மக்கள் கூட்டமாக திரள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இசிஆர் சாலையில் முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், ரிசார்ட்கள் பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மது விருந்துடன் கூடிய கேளிக்கை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல்களுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்ணை வீடுகள், நட்சத்திர விடுதிகளில் பின்புறம் உள்ள கடற்கரையில் கூடுவதற்கும் கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வருபவர்கள் 31-ந்தேதி இரவு 10 மணிக்குள் அந்தந்த விடுதிகளில் வந்து தங்கி விடவேண்டும். அறைகளில் தங்குவதற்கும், உணவகங்களுக்கு செல்வதற்கும் எந்தவித தடையும் இல்லை.

உணவு அருந்திவிட்டு விருந்தினர்கள் யாரும் தங்கள் அறைகளை விட்டு வெளியே வரக்கூடாது. அதேபோல் நீச்சல் குளங்கள் செயல்படுவதற்கும் அனுமதி கிடையாது. கூட்டமாக வாண வேடிக்கை நிகழ்ச்சிகளுக்கும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அறைகளிலேயே அவரவர்கள் புத்தாண்டு கொண்டாட வேண்டும். வெளியே வரக்கூடாது.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை பகுதிகளில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இ.சி.ஆர். சாலையில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். மதுபோதையில் பெண்களை கிண்டல், கேலி செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

குற்றச் செயல்களை கண்டுபிடிக்கும் வகையில் மப்டி உடையிலும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் 10 தற்காலிக சோதனை சாவடிகள் மூலம் கடுமையான வாகன தணிக்கை செய்யப்படும்.

மாமல்லபுரம் முதல் முட்டுக்காடு வரை இ.சி.ஆர். சாலையில் உள்ள 500 சிசிடிவி காமிராக்களில் பதிவாகும் காட்சிகள் காவலர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

31-ந்தேதி மாலை 6 மணி முதல் முட்டுக்காடு சோதனைச்சாவடியில் இரு சக்கர வாகனங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் வாலிபர்கள் மடக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். இவர்கள் மாமல்லபுரம் செல்ல அனுமதி கிடையாது. குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் வருபர்கள் மாமல்லபுரம் செல்ல வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் வரவேற்பு அறையில் உள்ள சிசிடிவி காமிரா கண்டிப்பாக இயங்க வேண்டும். அறைகளில் தங்க வரும் விருந்தினர்களிடம் ஆதார் அட்டை, தேர்தல் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை பெற்றுக்கொண்டே ஓட்டல் நிர்வாகங்கள் அறைகள் ஒதுக்கி தரவேண்டும். தனியாக வரும் நபர்களுக்கு அறைகள் வழங்கக்கூடாது. குறிப்பாக அடையாள அட்டை சமர்ப்பிக்காத நபர்களுக்கு அறைகள் கொடுக்கக் கூடாது.

இவ்வாறு செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கூறினார்.

இக்கூட்டத்தில் மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், ஓடடல்கள் சங்க மாநில துணைத்தலைவர் கே.பாண்டியன், ரெஸ்டாரண்டுகள் சங்க நிர்வாகி பி.சண்முகானந்தன் மற்றும் மாமல்லபுரம் ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதி, பணணை வீடுகள் உரிமையாளர்கள், இயக்குனர்கள், பொது மேலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *