நாடும் நடப்பும்

ரிசர்வ் வங்கியின் முடிவு : பொருளாதார வளர்ச்சிக்கு தெம்பு

வட்டிகள் குறைவாக தொடர்கிறது; நிதி சேவைகள் புது வருமானம் தருகிறது


ஆர்.முத்துக்குமார்


கடந்த வார இறுதியில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாய் டாடா நிறுவனத்திடமே நாட்டுடமையாக்கப்பட்ட ஏர் இந்தியா விமான சர்வீஸ் மீண்டும் திரும்பப் தரப்பட்டு விட்டது அதற்கான விலையாக ரூ.18 ஆயிரம் கோடியை கொடுக்க டாடா நிறுவனமும் சம்மதித்துள்ளது.

மற்றொரு நிகழ்வு ரிசர்வ் வங்கியின் 6 பேர்கொண்ட நிபுணர்கள் குழுமம் 3 நாட்களாக ஆலோசித்து வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்று அறிவித்து விட்டது.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் இம்முடிவு பற்றி கூறுகையில் அந்த நிதிக் குழும உறுப்பினர்களில் 5 பேர் வட்டி விகித மாற்றம் தேவையற்றது எனக் கூறி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான விளக்கம் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதை என்ற கரையை எட்டிக் கொண்டிருக்கும் கப்பலாக இருக்கும் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க விரும்பவில்லை. கப்பல் ஆடாமல் அசையாமல் கரையை எட்டிய பிறகு எத்திசையில் செல்லலாம் என முடிவு செய்வோம் என்று உவமையைக் கூறி விளக்கம் தந்துள்ளார்.

அது மட்டுமா? நிதிப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க வைக்க தற்போது ரூ.2 லட்சம் வரை வங்கிக் கணக்கில் இருந்து இலகுவாக ஐஎம்பிஎஸ் பரிமாற்றம் செய்ய இருக்கும் உச்ச அளவை மேலும் அதிகரித்து ரூ. 5 லட்சம் வரை என்ற உயர்த்தியும் உள்ளார்கள்.

சிறு வியாபாரிகளுக்கு இது பெரிய மாற்றத்தை தரப்போவதில்லை; ஆனால் வசதி படைத்த தொழிலதிபர்கள், லாபகரமாக வளர்ந்து விட்ட புது தொழில் நிறுவனங்கள் வங்கிச் சேவைகளுக்கு நேரில் செல்லும் தேவை இனி இருக்காது.

புது முதலீடுகள், அன்றாட செலவினங்களுக்கு இப்படி ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் வரை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு அதாவது தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ தரும் வசதி அவர்களுக்கு புது சக்தி மிகுந்த ஆயுதமாக இருக்கப் போகிறது.

இதனால் என்ன பயன்? வங்கிக்கு செல்லாமல் பண பரிவர்த்தனைகளால் என்ன லாபம்? நாட்டில் டிஜிட்டல் பண பரிமாற்றம் மேலும் ஊக்கம் பெறும்.

இன்டர்நெட் பேங்கிங், செயலிகள் கொண்டு மொபைல் பேங்கிங், ஏடிஎம் முதலிய பரிமாற்றங்கள் மேலும் வளரும்.

இவையெல்லாம் 24 மணி நேர சேவைகள், இங்கே பகல், அங்கு இரவு என்று இருக்கும் வெளிநாடுகளில் நிதி முதலீடுகள், சேவைக் கட்டணங்களை தர இது மிகவும் தேவைப்படுகிறது.

தற்போது ரிசர்வ் வங்கி தாராளமயமாக்கல் பட்ட பணம் அனுப்புதல், அதாவது Liberolised Remitante Scheme வழியாக இந்தியர்கள் வெளிநாடுகளில் மருத்துவ செலவுக்கு படிப்பிற்கு வீடு வாங்கவும் பங்கு வர்த்தகங்களில் ஈடுபடவும் ஏதேனும் டிஜிட்டல் நிறுவனத்தின் வழியாக பொருட்கள் வாங்கவும் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை அனுமதிக்கிறது.

இத்திட்டத்தின் படி முதல் 7 லட்சம் ரூபாய் வரை வரி ஏதும் கிடையாது. ஒரு ஆண்டில் அனுமதிக்கப்படும் அந்த 2 கோடியே 50 லட்சம் ரூபாயில் செய்யப்படும் அன்னிய செலாவணி உபயோகத்திற்கு 5% வரியை டிடிஎஸ்ஆக Tax Dedurted at Source வழியாக மட்டும் பிடிப்பார்கள்.

(அதாவது கிட்டத்தட்ட டாலர் 2,50,000 வரை நம்மால் வெளிநாடு வாழ் சொந்த பந்தங்களுக்கு எளிதில் வங்கி ஆப் வழியாக அனுப்பி விடலாம். அதற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை அளவு ரூ. 5 லட்சம் என்று கட்டுப்பாட்டை தளர்த்தி உள்ளார்கள்.

வங்கிகள் செயல்பட வட்டி வரவு மிக முக்கிய அம்சமாகும். கடந்த ஆண்டு மே 22 முதல் நடப்பு மாதம் வரை அதாவது கிட்டத்தட்ட 17 மாதங்களாக வங்கி வட்டி தொடர்ந்து மிகக் குறைவாகவே இருக்கிறது.

இப்படியே இருந்தால் நல்லதா? வங்கிகளுக்கு வருமானம் குறைந்து விட்டால் செலவினங்களுக்கு அரசு முறை கடன்களை அதிகமாக பெற வேண்டிய கட்டாயமும் எழுகிறது.

மத்திய அரசின் பொருளாதார தளர்வு கொள்கைகளால் எளிதில் வங்கிகளால் அதிகப்படி கடன்களைப் பெற முடிகிறது.

அதற்கான வரிச்சுமையை பின்னர் வாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் நாம் உணர்ந்தாக வேண்டும்.

அதாவது பொருளாதாரம் நிலையான கரையை எட்டியவுடன் கப்பலில் தப்பி வந்தவர்கள் மீண்டும் அதிக வட்டிச் சுமையை சுமந்தாக வேண்டும்!

அதாவது இன்றைய கட்டத்தில் இலகுவாக கடன் வாங்கி விடலாம்; பின்னர் வர இருக்கும் தலைமுறை தான் அதன் தாக்கத்தை உணர்வார்கள்.

இதை மனதில் கொண்டு வங்கிகள் கடன் சுமைக்கு ஈடாக வருவாயை தற்போது அதிகரிக்க வைக்க யோசித்து தான் ரிசர்வ் வங்கி முடிவு எடுத்திருப்பது புரிகிறது.

சரி கடன் வாங்காமல் இருந்தால் அதாவது கடன் வட்டிகளை சற்றே அதிகரித்து விட்டால்….? இது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை காப்பாற்ற வேண்டிய தருணம். அவரிடம் கையிருப்பு நிதி பற்றாக்குறையாக இருப்பதால் சும்மா வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் தங்கம், வெள்ளி சாமான்களை விற்று அவரவது சிகிச்சைக்கு உதவியாக வேண்டியதுதானே சரியான முடிவாக இருக்கும்.

அவர் குணமடைந்து மீண்டும் வந்த பிறகு மீண்டும் சம்பாதிக்க நடமாட வேண்டும். அது போன்ற கண்ணோட்டத்தில் ரிசர்வ் வங்கி பல முக்கியமான முடிவுகளை கடந்த வாரம் அறிவித்திருப்பது நாம் உலக பொருளாதார வல்லரசு பட்டியலில் முதல் 3 இடத்திற்குள் வரும் காலக் கட்டத்தை நோக்கி பயணிக்க தேவைப்படும் நல்ல ஊன்றுகோலாக இருக்கும் முடிவுகள் அவை என்பதால் பங்கு மார்க்கெட்டில் எழுச்சிமிகு வரவேற்பாக 65 ஆயிரம் புள்ளிகள் என்ற உச்சத்தை மீண்டும் தொட்டு விட்டது!

நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு தெம்பூட்டும் ரிசர்வ் வங்கியின் புதிய முடிவுகளை வரவேற்போம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *