சிறுகதை

ரிங்டோன் … ராஜா செல்லமுத்து


சிறுகதை


சங்கர் தான் வைத்திருந்த பழைய செல்போனை கொடுத்துவிட்டு புதிய செல்போன் வாங்கி இருந்தான்.

அந்த செல்போன் வாங்கியதிலிருந்து பொன்னைப் போல பூவைப் போல அதை தொட்டுத் தொட்டு பார்த்துக் கொண்டிருந்தான் .

அந்த செல்போனை கண்ணாடி போடுவது கண்ணாடிக்கு கவர் போடுவது என்று தான் கட்டிய மனைவியை அலங்கரிப்பது போல அந்த செல்போனை அலங்கரித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய ரிங்டோன்கள் எல்லாம் விதவிதமாக வலம் வந்தன.

இதனால் அவன் முன்பு வைத்திருந்த செல்போனின் ரிங்டோன் இப்போது முழுவதுமாக மாறியிருந்தது.

ஒரு உயர்தர செல்போன் கையில் இருந்ததால் அவனுக்கு தலை கால் புரியாமல் இருந்தது . சங்கரைப் பார்ப்பவர்கள் எல்லாம் ஒரு மாதிரியாக அவனது செய்கையை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்துப் போனார்கள்.

அந்தச் சிரிப்பின் அர்த்தம் என்னவென்று அவனுக்குத் தெரியும்.

ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான் சங்கர்.

அவன் வைத்திருக்கும் செல்போனை விட அவன் வைத்திருக்கும் ரிங்டோன் மீதுதான் நிறையப் பேருக்கு காேபம் இருந்தது .

அது என்ன காரணம் என்று அவனுக்கு தெரியாமல் இல்லை.

தெரிந்தாலும் அதை அவன் சொல்வதற்கில்லை.

அதை அவன் ஏன் அப்படி செய்தான் என்று அவளுக்குத் தெரியும் .

ஆனால் அவனுக்கு போன் செய்பவர்களுக்குத் தான் எரிச்சலாக இருந்தது . அவனிடம் நேரடியாக ஒரு சிலர் கேட்டுவிட்டார்கள்.

ஆனால் அதற்கு அவன் நூதனமாக பதில் சொன்னான். சிலருக்கு அது பிடித்திருந்தது. சிலருக்கு அருவருப்பாக இருந்தது.

அப்படி அவன் வைத்திருக்கும் ரிங்டோன் பற்றி சிலர் அவனிடமே நேரடியாக கேட்டார்கள்.

என்ன சங்கர் செல்போன் வச்சிருக்குறது நல்லது. அதுல ரிங்டோன் பாட்டு முழுதும் வைத்திருக்கிறது, அதுக்காக ஒவ்வொரு நேரமும் முழு பாட்டு கேட்கிறது அவசியமில்லை.

ஏன்னா ரிங் 3 அடிக்கும்போது நீ எடுக்க மாட்டியா ? இது என்ன கொடுமையா இருக்கு .

அவசரமா ஏதாவது ஒரு செய்தி சொல்லனும்னா கூட நீ வச்சு இருக்கிற முழு பாட்டையும் கேட்டுவிட்டு தான் அடுத்து போக வேண்டியது இருக்கு .

இது என்ன கொடுமை? என்று சிலர் அவரிடம் நேரடியாக கேட்டார்கள்.

அதற்கு சங்கர் அருமையாக பதில் சொன்னான்.

மனுஷன் ஒவ்வொரு நாளும் ஒருவேளை செஞ்சிட்டு கஷ்டப்பட்டு வாராங்க. யாருக்காவது போன் செய்யணும்னா நான் வச்சிருக்கிற இந்தப் பாட்டு ரெண்டு நிமிஷம் கேட்டா போதும் மனசே உங்களுக்கு இரங்கும்.

அந்தப் பாட்டு உங்களுக்கு கேட்கனும்னா ரிங் ஒன்னு அடிச்சதும் கட் பண்ணினா, அந்தப் பாட்டு முழுசையும் உங்களால கேட்க முடியாது.

அதனால தான் உங்களுடைய மன பாரம் குறைகிறது .புத்துணர்ச்சி ஏற்படும். ஒரு புது உலகத்துக்கு போறதுக்குத் தான் முழு பாட்ட நீங்க கேக்கணும் . அதற்காகத்தான் நான் ஒரு ரிங் டாேன்ல எடுக்கல.

மொத்தப் பாட்டு முடிஞ்சதுக்கு அப்புறம் கடைசியில் தான் நான் போன் எடுக்கிறது. இது எனக்கு போன் செய்றவங்களுக்கு நான் செய்கிற நல்லதா தான் நினைக்கிறேன்.

மத்தவங்களுக்கு இது எப்படியோ அப்படிங்கறது எனக்குத் தெரியாது என்று தன்னுடைய ரிங்க்டோன் பற்றி நூதனமாக பதில் சொன்னான் சங்கர். அதைக் கேட்ட சிலர் ஆமோதித்தார்கள்; சிலர் விவாதித்தார்கள்.

ஆனால் சங்கர் அப்படிச் செய்வது தவறு என்று சிலர் சொன்னார்கள். அதில் ஒரு உண்மையும் உள்ளது தெரிந்தது .

அவசரமாக போன் செய்து விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால் மொத்த பாடலையும் கேட்டு முடித்த பிறகு சங்கரிடம் இருந்து பதில் வரும்.

அதற்காக நாம் அவ்வளவு நேரம் காக்க வேண்டிய அவசியம் இல்லை .

அதோடு எல்லா நேரமும் ஒரு மனிதன் சந்தோஷமான செய்திகளை பகிர்ந்து கொண்டு இருக்க முடியாது. சில நேரம் சில செய்திகளை ,சில சம்பந்தமில்லாத செய்திகளைச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்றபோது அந்தப் பாடல் இடையூறாக இருக்கும்.

கொஞ்சம் பாடலை குறைத்துக் கொண்டு சீக்கிரம் போன் எடுங்க என்று சங்கருக்கு அன்பு கட்டளையிட்டார்கள் நண்பர்கள் . ஆனால் அவன் ஏற்றுக் கொண்ட தாய் மனம் சொன்னாலும் ஒரு சில நேரங்களில் முழு பாடல் அடித்த பிறகு தான் தன் போனை எடுத்தான் சங்கர்.

அவனது ரிங்டோனில் நல்ல பாடல் தான் வைத்திருக்கிறான் .

அது போன் அடிப்பவர்கள் அந்தப் பாடலை கேட்க வேண்டும் என்பதற்காக சங்கர் போன் எடுக்க கூடாது என்று நினைப்பவர்களும் உண்டு .

ஏன் இந்தப் பாடலை வைத்திருக்கிறான் ? என்று நினைப்பவர்களும் உண்டு.

இந்த இரண்டுக்கும் நடுவில் தான் அவனின் ரிங்டோன் இருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published.