போஸ்டர் செய்தி

ராம்பூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் – நடிகை ஜெயபிரதா பேட்டி

ஐதராபாத்,ஏப்.7–

ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் என நடிகை ஜெயபிரதா கூறினார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல நடிகை ஜெயபிரதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-–

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து, மாநிலங்களவை எம்.பி.யாகவும் பணியாற்றினேன். தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடுவின் வசம் வந்த பிறகு என்னை மிகவும் அவமதித்தனர். அப்போது அமர்சிங், என்னை சமாஜ்வாடி கட்சியில் சேர்த்துவிட்டார். 2004 -ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எனக்கு உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

எனக்கு கட்சியில் செல்வாக்கு உயர்ந்தது அக்கட்சியில் இருந்த அசம்கானுக்கு பிடிக்கவில்லை. 2009-ம் ஆண்டு மீண்டும் எனக்கு ராம்பூர் தொகுதி வழங்கப்பட்டதால் என்னை தோற்கடிக்க அசம்கான் முயற்சி செய்தார். இருப்பினும் நான் வெற்றி பெற்றேன். அகிலேஷ் யாதவுடன் அமர்சிங்குக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் என்னையும், அவரையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தனர்.

இதற்கிடையே, அசம்கான் என் மீது ஆசிட் ஊற்ற முயன்றார். மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து என்னை அசிங்கப்படுத்தினார். இதையடுத்து 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சி சார்பில் பிஜ்னோர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தேன். அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி இருந்தேன்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்தியில் நான் பிறந்திருந்தாலும், ராம்பூர் தொகுதி மக்கள் என்மீது காட்டிய அன்பு அளப்பரியது. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னை விடவில்லை. அந்த நேரத்தில் எனக்கு ராம்பூர் தொகுதியில் போட்டியிட பாரதீய ஜனதா வாய்ப்பு அளித்தது. அதனால் அக்கட்சியில் இணைந்து ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறேன். என்னை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி சார்பில் அசம்கான் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. ராம்பூர் தொகுதி மக்கள் என்னை 3-வது முறையாக நாடாளுமன்றத்துக்கு அனுப்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *