செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர் விடுதலை: ஒருவருக்கு 6 மாதம் சிறை

இலங்கை நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம், பிப். 22–

ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 7-ந்தேதி காலை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையேயான இந்திய கடல் எல்லை பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தை சேர்ந்த ரீகன், சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகை சிறைபிடித்தனர். மேலும் அதில் இருந்த ஜான்சன், மெட்டன், அந்தோணி டிஸ்மர், முனியசாமி, ஜேசுராஜா, சேகர், முனியசாமி, கிளவர்சன், பிரசாந்த், பிரபாகரன், செல்வராஜ், முனியசாமி, செல்வதாமஸ், ஆரோக்கியம், ஆஸ்வார்ட் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதிமன்ற காவல் முடிவடைந்தையடுத்து இன்று அவர்கள் மீண்டும் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் எல்லைதாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 19 பேரில் 18 மீனவர்களை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. ஜான்சன் என்பவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கனவே கடந்த வாரம் 3 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை எதிர்த்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தண்டனை அளித்திருப்பது சக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்த மீனவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *