செய்திகள் வாழ்வியல்

ராமேஸ்வரம் அபய ஆஞ்சநேயர் கோவில்

Spread the love

அனுமன் என்பவர் இந்து மத அடிப்படையில் ராமபிரானுக்கு நெருங்கிய உதவியாளனாக முக்கியமானதொரு இடம் பெற்றிருந்தார்.

இவர் வாயு பகவானின் மைந்தன் ஆவார். வாயுவே அனுமனுக்கு தந்தையாகவும் குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரன் என்று அழைக்கப்படுகிறார்.

ராமாயண காவியத்தில் அனுமனுடைய பங்கு மிகவும் முக்கியமானது. இவர் என்றும் சிரஞ்சீவி ஆக வாழ்கிறார் என்பது ஐதீகம். கடைசி வரை பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்த மகான். அவர் சிவபெருமானின் அம்சமாகவே அனுமன் இருக்கிறார் என்பது உண்மை. அனேகமாக வைணவக் கோயில்களில் அனுமாருக்கு தனி சன்னதி இருக்கும் அவரை திருமாலின் சிறிய திருவடி என்று போற்றிப் புகழ்கின்றனர். இன்று அந்த அனுமனுடைய ஒரு திருக்கோவிலைப் பற்றி நாம் அறியலாம்.

இந்த வரலாற்று காவியத்தின் அடிப்படையிலே பக்தர்கள் ராமேஸ்வரத்தில் அனுமனுக்காக ஒரு கோவில் எழுப்பி அதை அபய ஆஞ்சநேயர் என்ற பெயரிலே கட்டி முடித்தனர். இந்த கருவறையிலே இரட்டை ஆஞ்சநேயர் கடல் மணலில் செய்த வாலறுந்த மற்றொரு அனுமன் சிற்பமும் இந்த கோவில் முன்பு உள்ளது. எட்டுப்பட்டிகளுடைய விமானம் இந்த ஆஞ்சநேயர் சன்னதி மேலே கட்டப்பட்டுள்ளது. இந்த திருக்கோவிலின் தல விருட்சமாக அத்திமரம் உள்ளது. இந்த அத்தி மரத்தில் இளநீரை கட்டி பக்தர்கள், தங்கள் வேண்டுகோளை சமர்ப்பிக்கின்றனர். தங்களது வாழ்க்கையில் கோபத்தினால் ஏற்பட்ட பல பிரச்சனைகளை சந்தித்து வாழ்க்கையிலே திருப்பத்தை ஏற்படுத்தியதற்கு பிராயச்சித்தமாக இந்த கோயிலுக்கு வந்து இந்த ஆஞ்சநேயரை அனுமன் ஜெயந்தி அன்று அல்லது சனிக்கிழமைகளில் வேண்டிக் கேட்டுக் கொள்ள, அவருடைய வாழ்க்கையிலே நல்ல ஒரு மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை. அனுமன் கோபம் கொண்டு பின்னர் சாந்தமாக மாறியதால் இந்த அருள் இத்திருக்கோவிலுக்கு உள்ளது என்கின்றனர்.

இந்தத் திருக்கோவில் ராமேஸ்வரத்தில் தேவஸ்தானம் வாகனம் நிறுத்தும் வழிக்கு அருகே பத்திரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோவிலில் கருவறையில் அபய ஆஞ்சநேயர் உள்ளார். அதற்கு அருகில் ஒரு அத்தி மரத்தின் பக்கத்தில் வால் இல்லாத அனுமன் உள்ளார். இது கடல் மணலில் உருவான ஒரு சுயம்புவாகத் தோன்றிய ஆஞ்சநேயர். இதன் மேற்பகுதியில் கிழிஞ்சல்கள் இருப்பது காணப்படுகிறது. இதற்கு எதிரே அனுமன் தீர்த்தக்குளம் உள்ளது.

ராமபிரான் சீதையை மீட்டுவர, இலங்கைக்கு சென்று ராவணனிடம் போரிட்டு, அவனை கொன்று சீதையை மீட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரம் வந்து சிவபெருமானை நோக்கி வணங்க ஏற்பாடு செய்தார். கடற்கரை வந்த பின்னர் அனுமானிடம் பூஜை செய்ய ஒரு சிவலிங்கத்தை எடுத்து வரும்படி கட்டளையிட்டார். உடனே வெகு வேகமாக சென்று கைலாயத்தில் ஒரு சிவலிங்கத்தை எடுத்து வாய் வேகமாக புறப்பட்டு ராமேஸ்வரம் வந்தார். இந்த இடைப்பட்ட நேரத்தில், பூஜை காலம் முடியப் போகிறதே என்று சீதாதேவி தேவியிடம் ஒரு லிங்கத்தை கொண்டு வரும் படி கேட்டுக்கொண்டார்.

எனவே சீதாதேவி ஒரு கடற்கரையில் உள்ள மணலைக் கொண்டு ஒரு லிங்கத்தை உருவாக்கினார். அதை வைத்து பூஜை செய்து முடித்தார். அந்த பூஜை முடிந்தவுடன் ஆஞ்சநேயர் கைலாசத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை ஏந்தி ராமபிரானிடம் வர, அதற்கு முன்னரே பூஜை முடிந்து விட்டதால் மிகவும் ஏமாற்றத்துடன் தான் கொண்டுவந்த சிவலிங்கத்தையும் வைத்து பூஜை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று ராமபிரானும் இந்த சிவலிங்கத்திற்கும் மறுபடியும் பூஜை செய்து வணங்கினார். பூஜை முடிந்த பின்பு ஆஞ்சநேயர் சீதாபிராட்டி செய்த அந்த லிங்கத்தை அப்புறப்படுத்த முயன்றார் .ஆனால் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த லிங்கத்தை நகற்ற முடியவில்லை. எனவே தனது வலிமை மிகுந்த வாலைக் கொண்டு எடுக்க முயற்சி செய்தார். முடியவில்லை. தன்னுடைய வாலால் அந்த லிங்கத்தின் மீது பலமுறை அடித்தார். வால் அறுந்து விட்டது. ஆனால் லிங்கத்தை அசைக்க முடியவில்லை. இதை கோவில் சுவற்றில் சிற்பமாக அமைத்துள்ளனர்.

இங்கு ஆஞ்சநேயரே மிகவும் பிரதானம் என்பதால் எந்த பரிவார மூர்த்திகளும் கிடையாது. இங்கு முக்கிய விழாக்களாக அனுமன் ஜெயந்தி, பிரதோஷ நாட்கள், மற்றும் சனிக்கிழமைகள், வெள்ளிக்கிழமைகள், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள அனுமனுக்கு தேங்காய், வெல்லம், அவல் ஆகியவற்றை சேர்ந்த கலவைகளை விசேஷ நைவேத்தியமாக படைத்து வழிபடுகின்றனர்.

மேலும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனி ரேவதி நட்சத்திரம், அனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை இந்த மூன்று நாட்களில் மட்டுமே இவருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர் என்பது ஒரு சிறப்பான அம்சமாகும்.

தினமும் காலை 6 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த திருக்கோவில் பக்தர்களுக்காக திறந்திருக்கிறது தினமும் நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோவில் ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம் – 623 526, 04573 221093, 94432 05289.புத்திர் பலம் யசோ தைர்யம்

நிர்பயத்வ ஹயக்ரீவ

யோவதேத் தஸ்ய நிஸ்ஸரத

வானு ஜன்னு கன்யா

பிரவா ஹத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *