சென்னை, ஜூலை 29–
ராமாபுரம் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் சூழலியல் தேடலில் தியடோர் பாஸ்கரனின் தடயங்கள் எனும் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
இராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், சூழலியல் மன்றம், ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறை, உயிரித் தொழில்நுட்பவியல் துறையுடன் சென்னை காக்கைக்கூடு பதிப்பகம் இணைந்து நடத்திய, ’சூழலியல் தேடலில், சு.தியடோர் பாஸ்கரனின் தட(ய)ங்கள்’ என்னும் தலைப்பிலான மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், இ.எப்.எல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் த.ஸ்ரீதேவி வரவேற்று பேசினார். புல முதன்மையர் முனைவர் சி.சுந்தரின் வாழ்த்துரையில், காலநிலை மாற்றம்தான் நமது உலகத்தையே அதிகம் பாதித்துக்கொண்டிருக்கிறது என்றும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு அவசிய அவசரத் தேவையாக உள்ளது என்றார். மேலும், சுற்றுச்சூழலை காப்பது நமது தலையாயப் பணி என்றும் மாணவர்களிடம் எடுத்துக் கூறினார்.
கணக்கெடுக்க வேண்டும்
சிறப்பு விருந்தினரான, சூழலியல் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் பேசுகையில், சு.தியடோர் பாஸ்கரனைத் தவிர்த்துவிட்டு சூழலியல் ஆய்வை அணுக முடியாது என்றார். மற்றொரு சிறப்பு விருந்தினரான பறவையியலாளரும் காக்கைக் கூடு பதிப்பக நிறுவனருமான ஜா. செழியன் பேசுகையில், சிட்டுக்குருவிகள் அழிந்தது எனும் பொய்யான தகவல் பரப்பப்படுவதை எடுத்துக்கூறி, சூழலியல் மன்றத்தின் முதற்கட்ட பணியாக, இராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் உள்ள சிட்டுக்குருவிகளைக் கணக்கெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, சூழலியலாளர் குமரன் சதாசிவம், எழுத்தாளர் நீரை.மகேந்திரன், ஊடகவியலாளர், பேச்சாளர் க.நாகப்பன் ஆகியோர் சு.தியோடர் பாஸ்கரனின் சூழலியல் தேடல் குறித்து மாணவர்களிடம் எடுத்துக்கூறினர். நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் பல துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உயிரித் தொழில்நுட்பவியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான முனைவர் மு.காமராஜ் நன்றி கூறிய, இக்கருத்தரங்கை, சூழலியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.பலராமன், உயிரித் தொழில்நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கு.பிரியா ஒருங்கிணைத்திருந்தனர்.