செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பிரதமர் மோடி 11 நாள் சிறப்புப் பூஜை

புதுடெல்லி, ஜன.12–

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி பிரதமர் மோடி தான் இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜைகளில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு இன்னும் 11 நாட்கள்தான் இருக்கின்றன. கும்பாபிஷேகம் நிகழும் நன்நாளில் இந்திய மக்களின் பிரதிநிதியாக கலந்துகொள்ள கடவுள் என்னைப் படைத்துள்ளார். இதை மனதில் கொண்டு நான் 11 நாட்கள் சிறப்புப் பூஜையை இன்று முதல் தொடங்குகிறேன். மிகவும் புனிதமான, வரலாற்று சிறப்புமிக்க கும்பாபிஷேக நிகழ்வைக் காண நான் பாக்கியம் செய்துள்ளேன். முதன்முறையாக நான் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன். இந்த 11 நாட்கள் பூஜைக்காக மக்களின் ஆசியைக் கோருகிறேன்” எனப் பேசியுள்ளார்.

ஆடியோ வௌியீடு

அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பிரதமர் மோடி சிறப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோ பதிவில் ‘ராம், ராம்’ என துவக்கி தொடர்ந்து அவர் பேசியதாவது:

”வரும் 22ம் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இந்த புனித நிகழ்வில் நான் பங்கேற்பது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இன்று முதல் 11 நாட்கள் விரதம் துவக்கி உள்ளேன். உணர்வுப்பூர்வமாக புதிய சக்தியை பெறுகிறேன். நான் ஒரு புத்துணர்ச்சியை உணர்கிறேன். இது போன்ற உணர்வை நான் அறிந்ததில்லை.

ராம பக்தர்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும். சுவாமி விவேகானந்தர், சத்ரபதிசிவாஜி ஆகியோரை நினைவுகூர்கிறேன். நமது கலாச்சாரத்தை உலக அளவில் புகழ் பெறச் செய்த விவேகானந்தரின் பிறந்த நாள் இன்று. அவரை நினைக்கும் போது ஒரு உத்வேகம் பிறக்கிறது. அவரது ஆற்றலும் , உற்சாகமும் இளைஞர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம்” என தனது உரையை முடித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலில் ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இந்நிலையில், இது ஆர்எஸ்எஸ், பாஜக நிகழ்ச்சி என்பதால் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *