காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி
லக்னோ, ஜன. 7–
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் 2024 ஜனவரியில் ராமர் கோயில் திறக்கப்படும் என்று அறிவிக்க, அமித் ஷா ராமர் கோயில் கமிட்டி தலைவரா? என காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜையில் கலந்து கொண்டார். இதன்படி, ராமர் கோவில் கட்டுவதற்கு ராம ஜென்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் மூலம் கட்டுமானப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ந் தேதி அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் என, தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆண்டு தொடக்கத்தில் ராமர் கோவில் திறக்கப்படும் என, பாஜக அறிவித்துள்ளது மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது.
மல்லிகார்ஜூன கார்கே கேள்வி
இந்தநிலையில், மல்லிகார்ஜுன கார்கே அரியானாவில் பேசும்போது அமித் ஷாவுக்கு காட்டமான கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், திரிபுரா சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஏன் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டீர்கள்? மேலும் நாடாளுமன்ற தேர்தல் மே மாதம் நடக்கும்போது, ராமர் கோவில் திறக்கப்படும் என்று சொல்கிறீர்கள். இப்படி அறிவிப்பதற்கு நீங்கள் யார்?
ராமர் கோயில் திறப்பு பற்றி கோயிலின் பூசாரிகள் அல்லது கோயில் கமிட்டி சொல்லட்டும். நீங்கள் ஒரு அரசியல்வாதி. நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதும், மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்வதும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை கொடுப்பதும் தான் உங்கள் வேலை. அதை நீங்கள் சரியாக செய்ய வேண்டும்’’ என கார்கே காட்டமாக தெரிவித்தார்.