ராமநாதபுரம், மார்ச் 26–
முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக களம் இறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் என்பவர் சுயேச்சையாக களம் இறக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக-வின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் அவரை தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை ஓ.பன்னீர்செல்வம் ஏற்கவில்லை. இதனால் பாஜக – பன்னீர்செல்வம் இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நிலவியது.
இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில், சுயேட்சையாக போட்டியிட போவதாக ஓ.பி.எஸ் அறிவித்தார். இதனால் தாமரை சின்னம் ராமநாதபுரத்தில் மலரும் என நம்பியிருந்த பாஜக-வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஓ.பி.எஸ் மனுதாக்கல்
இந்நிலையில் நேற்று ராமநாதபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (தந்தை பெயர்–ஓட்டக்கார தேவர்) சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது பெயரில் 3 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வாளி, பலாபழம், திராட்சை ஆகிய 3 சின்னங்களில் ஒன்றை ஒதுக்கீடு செய்ய கேட்டுள்ளார்.
இதனிடையே நேற்றைய தினம், வேட்புமனு தாக்கல் முடிவடைய இருந்த நேரத்துக்கு முன்னதாக ஒ.பன்னீர்செல்வம் (தந்தை பெயர்–ஒச்சப்பன்) என்ற பெயரில் மற்றொருவரும் சுயேட்சையாக வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா மேக்கிலார்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் என்பவரின் மகனான பன்னீர்செல்வம் என்பவர்தான் அந்த சுயேட்சை வேட்பாளர். சுயேட்சையாக களம் இறங்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தேர்தலில் விழும் வாக்குகளை தடுக்கும் நோக்கத்தில், அவர் பெயர் உடைய ஒருவரை சுயேட்சை வேட்பாளராக அதிமுக-வினர் ஏற்பாடு செய்து களமிறக்கியுள்ளதாக கூறப்படுவது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
ஓ.பி.எஸ்சை வீழ்த்த மேலும் சில பன்னீர்செல்வங்களை சுயேட்சை வேட்பாளர்களாக களமிறக்க எதிர்தரப்பினர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன். இதனால் ராமநாதபுரம் தொகுதியில் எத்தனை பன்னீர்செல்வங்கள் களமிறங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.