அதே பெயர் கொண்ட மேலும் 5 பேருக்கும் சின்னம்
ராமநாதபுரம், மார்ச்.31-
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டது. அவரது பெயர் கொண்ட மேலும் 5 பேருக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. குலுக்கல் முறையில் இந்த ஒதுக்கீடு நடந்தது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 41 பேர், 56 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். கடந்த 28ந்தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் 29 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
27 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளான நேற்று 2 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். அதனை தொடர்ந்து 25 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்பட்டு நேற்று மாலை அவர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு நடைபெற்றது.
அதன்படி, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இவர் தனக்கு வாளி, பலாப்பழம், திராட்சை சின்னங்களில் ஏதாவது ஒன்று கேட்டு இருந்தார். இந்த நிலையில் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் உத்தியாக பன்னீர்செல்வம் பெயர் கொண்ட மேலும் 5 பேர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டன. அவர்களும் தங்களுக்கு வாளி, பலாப்பழம், திராட்சை சின்னங்களை கேட்டு இருந்தனர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவர் பெயர் கொண்ட 6 பேருக்கும் சுயேச்சை சின்னங்களை ஒதுக்க நேற்று குலுக்கல் முறை கையாளப்பட்டது. அதன்படி ஓ,பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதே போல் ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வத்துக்கு கரும்பு விவசாயி சின்னமும், ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வத்துக்கு கண்ணாடி டம்ளர் சின்னமும், ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வத்துக்கு வாளி சின்னமும்,
ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வத்துக்கு திராட்சை சின்னமும், மலையாண்டி மகன் பன்னீர்செல்வத்துக்கு பட்டாணி சின்னமும் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட திருவாடானையில் நநடந்த அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பலாப் பழத்தை காண்பித்து தனது சின்னத்தை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.