சிறுகதை

ராமநாதன் இங்கிலிஷ் படிக்கிறான்! – சின்னஞ்சிறுகோபு

உங்களுக்கெல்லாம் அரசு பள்ளியொன்றில் ஆறாவது படிக்கும் சிறுவர்களான ராமநாதன், தேனப்பன் இருவரையும் நன்கு தெரியும்தானே!

அந்த பள்ளிக் கூடத்தில் ராஜாசிங் ஜெயக்குமார் என்ற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியில் இருக்கிறார். இவர் தன்னலம் பாராது, ஈடுபாட்டுடன் மாணவர்களுக்கு ஆங்கிலத்தை சொல்லிக் கொடுப்பார். இன்னும் கூட பல அரசு பள்ளிகள் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு நிகராக கல்வியில் சிறந்து விளங்குவதற்கு இவரைப் போன்ற நல்ல ஆசிரியர்கள்தான் காரணம்!

அன்று அந்த ஆங்கில ஆசிரியர், ஆறாவது வகுப்புக்கு எதிரேயிருந்த ஒரு பெரிய தூங்குமூஞ்சி மரத்திற்கு அருகே நின்றுகொண்டு, சியாமளா டீச்சருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

அவரது கையில் பத்தாம் வகுப்பு ஆங்கில தாவரவியல் புத்தகம் இருந்தது. அந்த புத்தகத்தின் அட்டையில் ஆங்கிலத்தில் ‘BOTANY’ என்று பெரிய எழுத்தில் அழகாக அச்சிடப் பட்டிருந்தது. அந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை டிசைன் செய்திருந்த ஓவியர், ஒரு பட்டாணிக்காயிலிருந்து முத்து முத்தாக பட்டாணி விதைகள் சிதறுவதுபோல டிசைன் செய்திருந்தார்! புத்தகம் புதிதாக அழகாக இருந்தது!

அப்போது அந்தப் பக்கமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்த நம்ம ராமநாதன் சும்மா போயிருக்கலாம்! ஆனால் அவன் அந்த புத்தகத்தின் அட்டையையும் அதிலிருக்கும் பட்டாணி கடலைகளின் படத்தையும் பார்த்தான். ஒரு ஆவலில் கொஞ்சம் வாய்விட்டு, அந்தப் புத்தகத்தின் பெயரை “பட்டாணி!” என்று சத்தமாக படித்து விட்டான்!

சியாமளா டீச்சர் அதைக்கேட்டு, ‘களுக்’கென்று சிரித்து விட்டார். சியாமளாவுடன் பேசிக் கொண்டிருந்த அந்த ஆங்கில ஆசிரியரும் திடுக்கிட்டு, திரும்பி நம்ம ராமநாதனைப் பார்த்தார். பிறகு தன் கையிலிருந்த Botany புத்தகத்தைப் பார்த்தார். அதிலிருந்த பட்டாணிகளின் படத்தையும் பார்த்தார். அப்போதுதான் அவருக்கு, Botany என்பதைதான் பட்டாணி என்று இந்த மாணவன் படித்திருக்கிறான், அதற்கு இந்த புத்தகத்தின் அட்டைப்படமும் ஒரு காரணம் என்பது புரிந்தது!

“டேய்…இங்கே வாடா….” என்று ராமநாதனை அருகே அழைத்து, “இது பட்டாணி அல்ல, பாட்னி! அதாவது தாவரவியல். தாவரங்களை பற்றிய புத்தகம் என்பதால்தான் இந்த புத்தகத்தின் அட்டையில் பட்டாணிக் காயின் படத்தைப் போட்டிருக்கிறார்கள். படத்தைப் பார்த்து, சும்மா யூகத்தில் படிக்கக் கூடாது. ஆங்கில எழுத்துக்களை கூட்டி தெளிவாக படிக்க கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு உன்னை கவனிக்கிறேன் போ!” என்று அன்புடன் அவன் முதுகில் தட்டி அனுப்பினார்.

ராமநாதனும் கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொண்டே தன் வகுப்புக்கு சென்றான். ‘கிராமத்திலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பலர் போதுமான ஆங்கில அறிவு இல்லாமல் வருகிறார்கள். அவர்கள் மீதெல்லாம் தனிக் கவனம் செலுத்த வேண்டும்’ என்று அந்த ஆங்கில ஆசிரியர் நினைத்துக் கொண்டார்.

அன்று அந்த பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு ஒரு மதிய விருந்துக்கு ஏற்பாடு நடந்துக் கொண்டிருந்தது. அந்த ஊரிலிருந்த ஒரு பெரிய பிரமுகர், தனது என்பதாவது பிறந்த நாளுக்காக அந்த பள்ளி மாணவர்களுக்கு ஒரு மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதனால் மளிகை சாமன்களெல்லாம் வந்து இறங்கி, பள்ளிக்கூடத்தின் சமையல் கூடத்தில் வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது.

அந்தப் பக்கமாக சென்ற ராமநாதன், அதையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தான். ஒரு சமையல்காரர் அடுப்பில் சூடாகயிருந்த எண்ணெய் சட்டியில், ஏதோ கோலம் போடுவது போல ஜாங்கிரி பிழிந்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ராமநாதன், ‘அட, இன்றைய சாப்பாட்டில் ஸ்வீட்டெல்லாம் உண்டு போலிருக்கே!’ என்று நாக்கை சப்பு கொட்டிக்கொண்டே அருகேயிருந்த ஒரு பெரிய எண்ணெய் பாட்டிலைப் பார்த்தான். அதில் ‘GINGELY OIL ‘ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.

அதைப்பார்த்த அவன், ‘ஓ… இது ஜாங்கிரி செய்வதற்கான ஸ்பெஷலான எண்ணெய் போலிருக்கு!’ என்று நினைத்துக் கொண்டான். அதோடு அவன் நின்றிருக்கலாம். அப்போது அங்கே அவனுக்கு அருகே வந்து நின்ற அந்த ஆங்கில ஆசிரியரையும் அவன் கவனிக்கவில்லை. வழக்கம் போல அவன் வாய்விட்டு, GINGELY OIL என்பதை “ஜாங்கிலி ஆயில்!” என்று படித்து விட்டான்! கிராம சொல்வழக்கில் ஜாங்கிரியை ஜாங்கிலி என்று சொல்வது உண்டல்லவா, அந்த ஞாபகத்தில் படித்து விட்டான் அவன்!

அப்போது பின்னாலிருந்து சிரிப்பு சத்தம் கேட்கவே திரும்பிய ராமநாதன், தனக்கு அருகே அந்த ஆங்கில ஆசிரியர் நிற்பதைப் பார்த்து, கொஞ்சம் அரண்டுப் போனான்.

“டேய்… அது ஜாங்கிலி ஆயில் இல்லேடா! ஜிஞ்ஜெளி அதாவது, ஆங்கிலத்தில் Gingelly என்றால் எள். அதாவது எள்ளிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய். அதாவது நல்லெண்ணெய்டா! என்னடா நீ , ஆங்கில வார்த்தைகளையெல்லாம் இப்படி யூகத்திலேயே படிக்கிறாய்? இனி பள்ளிக்கூட இடைவேளையில் என்னை வந்துபார். தினந்தோறும் உனக்கு கொஞ்சநேரம் ஆங்கிலத்தை எழுத்துக் கூட்டி படிக்க, எழுத கற்றுத் தருகிறேன்!” என்றார்.

அதோடு நில்லாமல், அந்த சமையல்காரரை கூப்பிட்டு “இங்கே ஒரு ஜாங்கிரி கொடுப்பா!” என்று கேட்டு வாங்கி, அதை ராமநாதன் கையில் அன்புடன் கொடுத்தார்!

சின்னஞ்சிறுகோபுவின் பிற கதைகள்:

கிருஷ்ணர் முகத்தில் நெய்!

ராமநாதனும் ஜல்லிக்கட்டு காளையும்!

ஓசிக் காலண்டர்!

நடிகை படம் போட்ட காலண்டர்!

பாகற்காய் அடை! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *