போஸ்டர் செய்தி

ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

சென்னை, செப். 14–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (14–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ராமசாமி படையாட்சியாருக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள முழுஉருவ வெண்கலச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

நாட்டிற்காக பெரும் தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு உருவாக்கி பராமரித்து வருகிறது.

மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் இராமசாமி படையாட்சியார் தென்ஆற்காடு மாவட்டம் எனப்படும் தற்போதைய கடலூர் மாவட்டத்தில் 1918ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் நாள் பிறந்தார். ராமசாமி படையாட்சியார் கடலூர் தொகுதியிலிருந்து 1952ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும், திண்டிவனம் தொகுதியிலிருந்து 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் பாராளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ராமசாமி படையாட்சியார் பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்த போது, அவரது அமைச்சரவையில் 1954 முதல் 1957 வரை உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அவர் மக்கள் நலப் பணியோடு சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.

அதேபோன்று, முதன்முறையாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு தொடங்கப்பட்டு வன்னியர் சமூகத்திற்கு மாநிலத்தில் 20 சதவிகித இடஒதுக்கீடும், மத்தியில் 2 சதவிகித இடஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை, உழைப்பாளர் கட்சி மாநாட்டில் முதன்முதலில் நிறைவேற்றியவர் ராமசாமி படையாட்சியார்.

ஆண்டுதோறும் அரசு விழா

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், சமூக நீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மறைந்த மரியாதைக்குரிய இராமசாமி படையாட்சியாரை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான செப்டம்பர் 16ம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்” என்று அறிவித்தார்.

மேலும், 19.7.2018 அன்று சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர் இராமசாமி படையாட்சியாருக்கு, அவர் பிறந்த கடலூர் மாவட்டத்தில் முழுஉருவ வெண்கலச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும்” என அறிவித்தார்.

அதன்படி, கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில், இராமசாமி படையாட்சியாருக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 0.69.0 ஹெக்டேர் நிலத்தில், அமைக்கப்படவுள்ள முழுஉருவ வெண்கலச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயகுமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் எஸ். செம்மலை, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பொ. சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *