சிறுகதை

ராதா வளர்ந்த கதை – டிக்ரோஸ்

முதல் முறையாக நர்ஸ் ராதா செய்த தவறு. ஒரு இளம் நோயாளி தனக்கு பணம் தேவை எனத் தனது ஏடிஎம் கார்டையும், ரகசிய எண்ணையும் தந்து அதை பணமாக எடுத்து வர உதவி கேட்க இவளும் சம்மதித்தது தான்!

டியூட்டி முடிந்தவுடன் பணத்தை ஏடிஎம் ல் எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டு மறுநாள் எடுத்து வரும்படி கேட்டுக்கொண்டதால் மறுநாள் வார்டுக்குள் பணத்துடன் நுழைந்த போது அந்த பெட் சுத்தம் செய்யப்பட்டு பளிச்சென புதிதாக இருந்தது. இவளோ அடுத்த சில நாட்களில் 2 லட்சம் ரூபாய் வரை எடுத்த பிறகே பணம் இல்லை என்று தகவல் வரும்வரை எடுத்துக் கொண்டாள்.

அந்த நோயாளி இறந்து போனவுடன் திருமணமாகாதவர் என்பதால் நண்பர்கள் உடலை நடுஇரவிலேயே பெற்றுக்கொண்டு ஏதோ ஒரு கிராமத்துக்கு கொண்டு சென்று விட்டனர்களாம்.

மருத்துவமனை பில்லையும் செட்டில் செய்து விட்டும் தான் சென்று விட்டனர்.

ராதா திகைத்து நின்றாள்.

*

ராதாவுக்கு 27 வயது. இளமை;அழகு சாதனங்கள், சத்தான உணவு வகைகள் சாப்பிட்ட ஆரோக்கியமும் பளிச்சென்று தெரியும்!

செவிலியரின் சேவை மனமும் முகத்தில் மாறாத புன்சிரிப்பும் என தங்கக் கம்மலில் மினுக்கும் வைரத்துடன் ஜொலித்தாள். சக நர்சுகள் டாக்டர்களை விட இவளிடம் எப்படி இவ்வளவு வசதி என கண்கள் விரிய பார்ப்பார்கள்!

ஜனவரியில் கன்னியாகுமரி அருகே இருந்த சொந்த கிராமத்துக்குச் சென்று இரண்டு அண்ணன்களுடனும் சில வாரங்கள் பொங்கல் விடுமுறையுடன் சில குடும்ப வைபவங்களில் கலந்து விட்டு பிப்ரவரி 10, 2020 தான் சென்னை திரும்பினாள்.

மீண்டும் இரண்டு வாரங்கள் விடுப்பு கேட்டு, சம்பளம் இல்லாத விடுமுறையையும் அனுபவித்துவிட்டே மார்ச் 1 முதல் டூட்டிக்கு வந்தாள்.

அந்த மத்திய ரக மருத்துவமனை ஊழியர்கள் அவ்வப்போது பேசிக்கொண்டது கொரோனா தொற்று பற்றிதான்! உலக சுகாதார அமைப்பு இதை பெருந்தொற்று என அறிவித்ததை சரியா? என்று விவாதித்தபடி பணிகளில் ஈடுபட்டனர்.

அங்கே இங்கே என்று பரவத் துவங்கிய கொரோனா சென்னையிலும் புயலாய் தாக்க இவளது மருத்துவமனையும் கொரோனா சிகிச்சை மையமாக மாறியது.

அன்று மாலை புது சட்டமாக கொரோனா வார்டில் மூன்று மாதம் பணியாற்ற அழைப்பு வந்தது. கையில் அதிக பணம் இல்லையே என குறைபட்டுக் கொண்டு இருந்த ராதாவுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அந்த மூன்று மாத டியூட்டிக்கு மூன்று மடங்கு அதிக சம்பளம், சாப்பாடு மற்றும் தனியே தங்கி இருக்கும்படி கட்டளை, அதற்காக அருகாமை ஓட்டலில் தனியறை தரப்படும் என்று அழைப்பு கடிதம் கூறியது.

அன்றிரவே தனது அண்ணன்கள் குடும்பத்தாரிடம் நிலைமையை கூறி ஜாக்கிரதையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டாள்.

விடுதி அறையை மறுநாள் காலையே காலி செய்துவிட்டு பெட்டிகளுடன் வாடகை காரை வரவழைத்து மருத்துவமனைக்குச் சென்று விட்டாள். தனது செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டு சிம்மை வெளியே பிரித்து வைத்து விட்டு கொரோனா டூட்டிக்கு சென்றாள்.

பிபிடி ஆடைகளையே அணிந்து விட்டால் ஏதோ பூச்சாண்டியை பார்ப்பதுபோல் இல்லாமல் ராதாவை பார்ப்பவர்களுக்கு சேவை செய்ய வந்த அழகு தேவதையாக தெரிந்தாள்.

மருத்துவமனையின் ஏசி குளிரிலும் உஷ்ணத்தை அந்தப் பிபிடி ஆடைகள் தந்ததால் பல நர்சுகள் உடல் கோளாறுகள் காரணமாக செயல்பட இயலாது வெளியேறிட நேர்ந்தது.

ஆனால் ராதாவோ சேவை, கடமை என பணியாற்றிக் கொண்டிருந்தாள். சக தோழிகள் இவளது அயராத சேவையை பாராட்டியபடி அவளுக்கு உற்சாகத்தையும் முகமூடியைக் கழற்றிவிட்ட போதெல்லாம் பழரசம், நொறுக்கு தீனி தந்து உபசரிப்பார்கள்.

நோயாளி உயிர் பிரிந்து விட்டால் அதிகம் பேசாது மௌனமாகிவிடுவாள்.

இப்படியாக மூன்று மாதம் நகர்ந்து விட்டது. தயக்கமே இன்றி மேலும் மூன்று மாதங்களுக்கு பணியாற்ற முன் வந்தாள்.

வீட்டு வாடகை மிச்சம், கை நிறைய சம்பளம், தங்கி இருந்த ஓட்டலில் விதவிதமான சாப்பாடு, மருத்துவமனையில் நல்ல உபசரிப்பு. அதனால்தான் மேலும் மூன்று மாத மணிக்கு ஆர்வத்துடன் செல்ல ஆரம்பித்தாள்.

*

அன்று இரவு 63 வயது சங்கர் மூச்சு திணறலுடன் தவித்துக் கொண்டிருந்தபோது ராதா அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டே உபசரணையுடன் மெல்லப் பேசிக் கொண்டு இருந்தாள்.

‘சார், இப்படி ரிலாக்ஸ் ஆகாம இருக்காதீங்க; பாட்டு கேட்க ஆசையா? எனக் கேட்டபடி செல்போனை எடுத்து அவரிடம் நீட்டிய போதுதான்,

‘ராஜீவ் காலிங்’ என ஒரு அழைப்பு வந்தது.

‘என் மகன் தான்’ என்று கூறிய சங்கரின் முகத்தில் பிரகாசம் கூடுவதை கண்டாள்.

அழைத்தவர் மருத்துவ அதிகாரியிடம் பேச ஆசைப்படுவதை தெரிந்துகொண்ட ராதா தன்னிடம் பேசலாம் என சொல்ல, ராஜீவ், இவளிடம் பேசியபோது

அப்பா சங்கர் தேறி வருவதை கூறிக் கொண்டு இருந்த போது மறு முனையில் இருமல் சத்தம் எழ ஆரம்பித்து பேச முடியாமல் மூச்சு இழப்பு அதிகரிப்பதை கேட்டாள்.

பிறகு வெளியே வந்து பேசும்போது ராஜீவை கோவிட் டெஸ்ட் எடுக்கச் சொன்னாள்.

மறுநாள் காலை அப்பாவிடமிருந்து அழைப்பு என்றவுடன் ‘அப்பா எப்படி இருக்கீங்க?’ என கேட்க மறுபுறம் ‘நர்ஸ் ராதா பேசுறேன்’ என்றவுடன் இவன் முகத்தில் சற்றே கவலை ரேகை ஓடியது.

உடனே அவள் ‘சாரி ராஜீவ் சார், உங்களை டிஸ்டர்ப் பண்ணி இருந்தா மன்னிக்கவும். நீங்க எப்படி இருக்கிறீர்கள்’ என கேட்டாள்.

‘சற்றே காய்ச்சல், பாராசிடமால் மாத்திரையை சாப்பிட்டதாகவும். பக்கத்து தெரு மருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிபயாடிக் ஒன்றை தற்போது ஆரம்பித்தும் விட்டேன்’ என்றான்.

‘மிக சரியானது, உங்களது கோவிட் டெஸ்ட் ரிசல்ட் நெகடீவ்வாக வர பிரார்த்தனை செய்து கொள்வேன்’. அப்பா நன்றாக இருப்பதாகவும் கூறியபடி அவரிடம் போனை தந்துவிட்டு மருந்து, மாத்திரைகளை பிரித்து வைப்பதில் மும்முரமானாள்.

அவள் காதுகள் சங்கர் பேசுவதை உற்றுக் கேட்டபடி தண்ணீருடன் அவருக்கு மாத்திரைகளைக் கொடுத்தபடி நின்றாள்.

‘சரி பிறகு பேசலாம்’ எனக் கூறி விடை பெற்ற பிறகு மாத்திரைகளை சாப்பிட்டபடி நர்ஸ் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் கூறியபடி அயர்ந்து தூங்கி விட்டார்.

ஆக ஒரே மகன், திருமணம் தடைபட்டு போனதில் குடும்பமே சோகமாக இருந்த நிலையில் ஓரு விபத்தில் அம்மா இறந்து விட்டாள்.

அந்த வேதனையில் அப்பா சங்கரும் திருமணப் பேச்சை எடுக்காமல் ராஜீவை மேலும் பல புதுப்புது கட்டுமான வேலைகளை எடுத்து அதையெல்லாம் லாபகரமாக மாற்றும் வேலையில் இருவருமே மூழ்கினர்.

அம்மாவின் இன்சூரன்ஸ் பணம், சமீப வர்த்தக வளர்ச்சிகளால் பல கோடிகளுக்கு அதிபராகினர்.

ஆனால் சொந்த பந்தங்கள் ஏதும் உடனிருக்க வழியில்லாத சூழலால் ஒருவித வெறுமையில் தான் இருவரும் வாழ்ந்து வருவதை ராதா முழுமையாக புரிந்து கொண்டாள்.

ஒருவேளை கொரோனா உறுதியானால் ராஜீவ்விடம் எப்படி பேசி என்னவெல்லாம் செய்வது என மனதில் அசை போட்டபடி பணியில் மும்முரமானாள்.

மாலையில் போனில் அழைத்த ராஜீவிடம் தற்போதைய நிலையை பற்றி கூறிட போனை வாங்கிப் பேச ஆரம்பித்தாள்.

‘இதுபற்றி அப்பாவிடம் சொல்லாதீங்க’ என்று சொல்வது மட்டும் சங்கருக்கு கேட்டது. சற்றே வியப்பாகவும் இருந்தது!

பிறகு அவரே நர்சிடம், ‘என்ன ஆச்சு?’ என கேட்டபோது, ‘மழுப்பாமல்’ நேரடியாக சொல்லிவிடுகிறேன். உங்க பையனுக்கு உங்களுக்கு தரும் சிகிச்சை மீது சற்றே அவநம்பிக்கை இருக்கிறது…’ என்றாள்.

உடனே அவள் பேச்சை நிறுத்த சொல்லிவிட்டு, ‘இவ்வளவு சிறப்பான கவனிப்பையும் மருத்துவ சிகிச்சைக்கும் என் சொத்து முழுவதையும் தந்து விடலாம்…’ எனக் கூறினார்.

அதைத்தான் அவளும் யோசிப்பதாகக் கூறியபடி அடுத்த வேலைகளில் மும்முரமானாள்.

ராஜீவுக்கும் நர்ஸ் ராதா சொன்னது போல அதே மருத்துவமனையில் இருந்தால் நல்லது என எண்ணியபடி ஆம்புலன்சை அனுப்பும்படி அம்மருத்துவமனைக்கு விண்ணப்பித்து அன்று இரவே அதே வார்டில் வேறு ஒரு அறையில் அனுமதிக்கப்பட்டான்.

எல்லா நர்சுகளும் பிபிடி உடையில் இருந்ததால், ஆண், பெண் வேறுபாடு தவிர அவனால் யாரையும் அடையாளம் கூட தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தான். மிகச் சோர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

சாப்பிடுவது, படிக்க ஏதாவது புத்தகம், வார இதழ் என நேரத்தை செலவழித்தான். செல்போனில் அப்பாவிடம் பேச அழைத்தால் அவர் தூங்கி கொண்டிருப்பதாக பணியில் இருப்பவர் கூறுவது வாடிக்கையானது.

இன்று கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பிறகு டூட்டி கிடையாது. ராதா கையில் புதுப்புது பெட்டிகளுடன், புதிய காரில் மிக ஆடம்பரமாக இருந்த புது வீட்டுக்குள் நுழைகிறாள்.

அவள் கையில் இருந்த ‘மக்கள் குரல்’ நாளிதழில் சில நாட்களுக்கு முன்பு கொரோனா சிகிச்சை பெற்று வந்த தந்தையும் அடுத்த ஒரு வாரத்தில் மகன் ராஜீவும் மருத்துவமனையிலேயே இறந்துவிட்டதாக விளம்பரம் இருந்ததை படித்தபடி அதை அழகாக மடித்து தனது பழைய நர்சு பணி ஆடைகளுக்கு அடியில் புதைத்து வைத்துவிட்டு அப்பெட்டியைக் கப்போர்டில் வைத்து மூடி விடுகிறாள்.

பின் குறிப்பாக சொல்லி ஆக வேண்டிய விவரங்கள்…

அப்பாவின் பரிதாப நிலையை கூறியபடி தனது அனுசரணை பேச்சால் மகன் ராஜூவிடம் பல வெத்து பேப்பர்களில், டாக்குமெண்டுகளில் கையெழுத்து வாங்கி விடுகிறாள். அதில் அப்பாவின் ஈமச் சடங்குகளை தனது நெருங்கிய பெண் நண்பர் ராதாவுக்கு அதிகாரம் தரும் உரிமையையும் தந்துள்ளான்.

மறு அறையில் இருந்த அப்பா சங்கரிடம் வெண்டிலேட்டர் உதவி தேவைப்பட்டால் அதற்கு சரி என ஒப்புதல் தரும் படிவங்களில் கையெழுத்து போடச் சொல்லி பல்வேறு டாக்குமெண்டுகளில் கையொப்பத்தை வாங்கி விடுகிறாள். அதில் தனது மகனின் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமாக கொண்ட ராதாவுக்கே எல்லா அதிகாரங்களையும் தருவதாக கூறும் படிவங்களில் கையெழுத்து வாங்கி விடுகிறாள்.

கூடவே அவரின் சொத்து வாரிசும் ராதா தான் என்றும் வங்கி கணக்கு முதல் வர்த்தக நிறுவன உரிமைகள் வரை அனைத்தையும் அதிகாரபூர்வமாக மாற்றும் டாக்குமெண்டுகளை சில மணி நேரத்தில் சட்டப்படி பதிவு செய்து கொள்கிறாள்.

இந்தநிலையில் சில நாட்களில் அப்பா இறந்து விடுகிறார். அடுத்த சில நாட்களில் மகனும் இறந்து விடுகிறார்.

*

கண்ணாடி முன் நின்றபடி தன் அழகுக்கு அழகூட்டிக் கொண்டிருக்கிறாள் கோடீஸ்வரி ராதா …. அதே

ராதா தான்! மூன்றாண்டுகளில் எட்டிப் பார்க்கும் சில வெள்ளை முடிகளை தவிர வேறு பெரிய மாற்றம் கிடையாது.

விசாலமான அந்த பங்களாவில் எங்கும் நேர்த்தியாக நிறைந்திருக்கும் மேஜை சேர்கள் தேக்கின் வனப்புடன் இவள் அழகிற்கு போட்டியாக பளபளத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு ஓரத்தில் அண்ணனின் மகள் ஏதோ கணக்கு எழுதிக் கொண்டு இருக்கிறாள்.

அண்ணன்களும் குடும்பத்தாரும் வெவ்வேறு அறைகளில் ஏதேதோ பணிகளில் மும்முரமாக இருக்கின்றனர்.

ஒரு கண்ணாடி டேபிளில் இருந்த மாத இதழில் தன் படம் அலங்கரிப்பதை புன்முறுவலுடன் பார்த்தபடி, ‘இந்த ஆண்டின் மிகச் சிறந்த தொழில்அதிபர்’ என்ற வாசகத்தை மனதிற்குள் வாசித்து விட்டு நகர்கிறாள்.

*

திருமணம் செய்து கொள்ள நேரம் வரவில்லை. செய்ய வேண்டிய பணிகளில் முழுமூச்சுடன் பணியாற்றி கொண்டு இருக்கிறாள்.

சொத்துக்கள் யார் யாருக்கு? என்பது முதல், தன் செக்குகளில் யார் கையெழுத்திடலாம் என்பது வரை எல்லாமே மிக நேர்த்தியாக முடிவு எடுத்து அதை உரிய முறையில் பதிவும் செய்து விட்டாள்.

தன் சம்பாதிப்பதில் ஒரு பகுதி பல்வேறு மருத்துவமனைகளில் முதலீடாக இருப்பதை உறுதி செய்து கொண்டாள். தனக்கு வந்து சேர்ந்த தொழிலாளர்கள் மிக சந்தோஷமாக இருப்பதில் கவனமாக இருக்கிறாள்.

–––

decrose1963@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *