சிறுகதை

ராணுவ வீரரின் செயல் -மு.வெ.சம்பத்

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக இரண்டு கிராமங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எங்கும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக் காடாக்கியது. மேக வெடிப்பே இதற்குக் காரணம் என வானிலை அறிக்கைகள் தெரிவித்தன. இன்னும் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்ற அறிவிப்பை வானிலை மையம் கூறியதும் எல்லா ஏற்பாடுகளையும் துரிதமாக செயல் படுத்தி எல்லா மக்களையும் பாதுகாப்பாக அங்குள்ள பள்ளிகளில் தங்க வைத்தனர். அந்த பள்ளிக் கட்டிடங்கள் சிறிது உயரமாகக் கட்டப்பட்டிருந்ததால் பள்ளிகளுக்குள் வெளி மழை நீர் புகவில்லை. ஆனால் உள்ளுக்குள் மைதானம் முழுவதும் நீரால் நிரம்பியிருந்தன. இதனால் பள்ளி வளாகம் முழுதும் சற்று குளிர்ச்சியாகக் காணப்பட்டது. இந்தப் பள்ளிகளில் தங்கியிருப்பவர்களுக்கு கொசுவலை, கொசு வத்தி, போர்வை, ஜமக்காளம் போன்ற அத்தியாவசமானப் பொருட்கள் தரப்பட்டன. மேலும் பள்ளிகளில் அத்தியாவசமான சமையற் பொருட்கள் இறக்கப்பட்டன. மழை ஓய்ந்து தண்ணீர் வடிந்தால் மட்டுமே இங்குள்ளவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்ப முடியும் என்ற நிலை தான் தொடர்ந்தது.

இன்று சற்று மழை குறைந்து காணப்பட்டாலும் இடை இடையே கனமழை பெய்து மக்களை அச்சுறுத்திய வண்ணமே இருந்தது. சேமித்து வைத்த சாமான்கள் காலியாகிக் கொண்டேயிருந்தது. சமையல் செய்வது ஈரத்தில் கடினமாக அமைந்தது. வெளியிலிருந்து கொண்டு வருவதென்றால் குறைந்தது பத்து கிலோ மீட்டராவது செல்ல வேண்டும் என்ற நிலை தான் இருந்தது. படகுகள் மூலம் தான் தயாரித்த பண்டங்கள் வர வேண்டும். பேரிடர் குழுவினர் தான் எல்லா உதவிகளையும் மேற்கொண்டனர். நல்ல வேலை பள்ளிகளில் ஏதும் கசிவு இல்லாததால் மக்கள் பாதுகாப்புடன் இருந்தனர். அங்கு தங்கியுள்ள சில பெண்கள் தாமாகவே முன் வந்து சமையலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதால் வேலை கொஞ்சம் சுலுவாக ஆகி விட்டது. மக்களை பேரிடர் குழுவினர் கதவுகளை நன்கு சாத்தி வையுங்கள். பூச்சி, பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்கள் வருவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம் என்றார்கள். மக்களிடையே சிறு சலசலப்பு ஏற்பட்டாலும் விழிப்புணர்வு அவசியம் தானே என்றனர் பேரிடர் குழுவினர்.

அடுத்த நாளும் மிதமான மழை பெய்ததால் மக்களை வீட்டிற்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் மக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது, அதை எப்படி வெளியேற்றப் போகிறோம் என்று கவலையுடன் தெரிவித்தனர். நாங்கள் உதவி செய்வோம் என பேரிடர் குழுவினர் கூறியதும் சற்று அமைதியானர்கள். இன்றுடன் கொண்டு வந்த சமையல் சாமான்கள் காலி என்ற அறிவிப்பு வந்ததும் பேரிடர் குழுவினர் மாற்று ஏற்பாடு செய்ய முனைந்தனர். வெளியில் இருந்து கொண்டு வருவது என முடிவு செய்து அதை செயலாக்க முற்பட்டனர்.

வெளியிலிருந்து வந்த காலை சிற்றுண்டி மற்றும் இரவு சிற்றுண்டி இவைகள் மிகவும் ஆறிப் போய் வந்தது கண்டு மக்கள் இரண்டும் சூடாக இருந்தால் நலம் என தங்கள் கோரிக்கையை வைத்தனர். வரும் மதிய சாப்பாட்டில் சாம்பார் மற்றும் ரசத்தை சூடு பண்ணி சமாளித்தனர்.

பேரிடர் குழுவினர் என்ன செய்வதென்று அறியாமல் திகைக்க, அங்கு வந்த ஒரு ராணுவ வீரர் அந்தப் பிரச்னையை சரியாகக் கையாண்டு மக்களுக்கு சூடாக கிடைக்க வழி செய்தார். ஏனெனில் சுற்றுப்புறம் மிகவும் குளிர்ச்சியாக இருந்ததால் மக்கள் சூடாக விரும்பினார்கள்.

அடுத்து வரும் நாட்களில் மழை குறைந்து தண்ணீர் வடிந்ததால் எல்லோரையும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களும் வீட்டிற்கு சென்று பழைய நிலை அடைந்ததும் பேரிடர் குழு விடை பெறும் நாளன்று மக்கள்ஒரு விழா ஏற்பாடு செய்தார்கள். அந்த விழாவில் அவர்கள் ராணுவ அதிகாரியிடம் எப்படி எங்களுக்கு சூடாக உணவு தந்தீர்கள் என்று கேட்க அவர் சியாச்சின் பனிமலை உச்சியில் பணிபுரியும் நம் வீரர்களுக்கு உணவு தரும் முறையைப் பின்பற்றியே செய்தேன் என்றார்.

வெப்ப உமிழ் வினை என பள்ளியில் நாம் படித்த முறையைத் தான் செய்தேன் என்றார். சோப்பு நீரில் நாம் கைகளை தேய்க்கும் போது ஒரு விதமான வெப்பம் உணருகிறோம் அல்லவா அது தான் வெப்ப உமிழ் வினை என்றார். உங்கள் தரப் போகிற சிற்றுண்டியை தனித் தனி பாக்கெட்டில் போட்டு அதை பாக்கெட் செய்தோம். அவைகளைச் சுற்றி ஒரு வேதியியல் பொருளின் குறைந்த அடர்த்தியுள்ளதை நான்தண்ணீரைச் சேர்த்து அதை ஒரு பாக்கெட்டில் போட்டு பேக் செய்தேன். வேதியியல் செயல்பாடு மூலம் உள்ளே உள்ள பொருள் சூடாக ஆனது என்றார். எல்லோரும் நாம் படிக்கும் படிப்பு நம் வாழ்வில் எவ்வளவு தூரம் பயன்படுகிறது என்பதை தற்போது அறிந்தோம் என்றனர் கோரஸாக. அப்போது ராணுவ வீரர் நீங்கள் படித்த வேதியல் பொருள் தான் அது என்பதால் நான் அதன் பெயரை கூறவில்லை என்றார். இதை தயவு செய்து யாரும் செய்யாதீர்கள் என்றார். ராணுவ வீரர்கள் எங்கிருந்தாலும் நாட்டு நலமே அவர்கள் எண்ணத்தில் இழையோடும் என்று ஊர்த் தலைவர் சொல்ல, அங்கு வாழ்க பாரத அன்னை மற்றும் வாழ்க பாரத நாடு என்ற ஒலி அலைகள் விண்ணைப் பிளந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *