லண்டன், ஜூன் 9–
இங்கிலாந்தின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சீன தயாரிப்பு கண்காணிப்பு கேமராக்களை அகற்ற அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பிரிட்டன் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை அகற்ற முடிவு செய்திருப்பதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் கொண்டு வரப்படவுள்ள மசோதாவில் இந்த அம்சம் இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க பகுதிகளில் சீன உளவு பலூன் உலாவுவது கண்டறியப்பட்டதாகவும், அந்த உளவு பலூன் அமெரிக்க வான் எல்லைக்குள் புகுந்து பல நாள்களாக சுற்றி வந்ததாகவும் கண்டறியப்பட்டது. இந்த உளவு பலூன் அமெரிக்க ராணுவத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பகுதிகளின் மேலே பறந்து சென்றதாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகன் கூறியது. பின்னர், அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
சீன சிசிடீவி அகற்ற முடிவு
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, அந்த பலூன் வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்டது எனவும், வழிதவறி அமெரிக்க வான் எல்லைக்குள் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தது. ஆனால், அந்த பலூனின் சிதறிய பாகங்களை ஆய்வு செய்ததில் அது உளவு பாா்ப்பதற்காக அனுப்பப்பட்டது என உறுதி செய்த அமெரிக்கா, சா்வதேச நாடுகளை சீனா ரகசியமாக உளவு பார்ப்பது அதிகரித்து வருவதாக அமெரிக்கா அச்சம் தெரிவித்தது.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு சீனா மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று அண்மையில் எச்சரித்திருந்தார். இந்த சூழலில், சீன அரசால் உளவு பார்க்கப்படுவதை தவிர்ப்பதற்காக அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை அகற்ற இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.