செய்திகள்

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிணிடர் வெடித்து பயங்கர தீ விபத்து

சென்னை, ஏப்.27–

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை 10.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்களில் 50 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் குப்பையின் மூலம் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோய், விபத்து என உடல்நலக்குறைவுக்கு உள்ளான நூற்றுக்கணக்கான நோயாளிகள் தினமும் சிகிச்சைக்காக வருகின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளி, புறநோயாளிகள் பிரிவுகளும் உள்ளன. பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவுகளும் உள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் 2வது டவரின் பின்புறம் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கல்லீரல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 27 நோயாளிகள் சிக்கிக்கொண்டனர். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், தீ விபத்து ஏற்பட்ட வளாகத்தில் இருந்து அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

தீ மளமளவென பரவத்தொடங்கிய நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் பேசிய ராதாகிருஷ்ணன்; தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்து நடந்த கட்டிடத்தில் நோயாளிகள் யாரும் இல்லை. தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டிடத்தில் இருந்த 27 பேரும் வெளியேற்றப்பட்டனர். இதுவரை எந்த பாதிப்பும் இல்லை, தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியமன்; மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முழுமையான தீ அணைக்கப்பட்ட பிறகே சேத விவரங்கள் தெரியவரும். தீவிபத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தை கரும்புகை சூழ்ந்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.