சிறுகதை

ராஜாவாக இருந்தாலும் – ராஜா செல்லமுத்து

ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு மேல் வந்து போகும் ஒரு பெரிய நிறுவனத்தின் காவலாளியாக நியமிக்கப்பட்டிருந்தார் கந்தசாமி.

செய்யும் வேலைக்கு சரியாக சம்பளம் வருகிறதோ இல்லையோ தான் செய்யும் வேலையை சரியாக செய்யும் பண்புடையவர்.

காலை 6 மணியிலிருந்து இரவு ஆறு மணி வரைக்கும் பணி என்றால் ஐந்தாம் 5.50 எல்லாம் வந்து விடுவார், ஆறு மணிக்கு வேலை முடியும் என்றாலும் சரியாக 6 மணிக்கு எல்லாம் போகாமல் கொஞ்சம் தாமதமாகவே செல்வார். ஆனால் நிறுவனத்திற்கு வரும்போதும் ஒரு நாள் கூட அவர் தாமதமாக வந்ததில்லை.

யாருடனும் அதிகம் பேச மாட்டார். அப்படி அதிகம் பேசினாலும் அர்த்தமுள்ளதாக பேசுவார். வீண் விவாதங்கள், வீராப்பு பேச்சுக்கள் வெட்டி பந்தாக்கள் கந்தசாமி இடம் எப்போதும் இருக்காது.

யார் வந்தாலும் அவர்களை விசாரித்து அனுப்புவது நிறுவனத்திற்குள் வரும் இருசக்கர வாகனம். நான்கு சக்கர வாகனங்களில் நம்பரை எழுதி வைத்துக்கொண்டு அவர்கள் என்ன காரணத்திற்காக நிறுவனத்திற்கு வருகிறார்கள் என்று சரியாக விசாரித்த பின்பு தான் நிறுவன வளாகத்திற்குள் ஆட்களையோ கார்களையோ அனுப்புவார் கந்தசாமி .

மற்ற ஊழியர்கள் எல்லாம் அவ்வளவு பெரிதாக கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். ஆனால் கந்தசாமி அப்படி அல்ல; நிறுவனத்திற்கு வரும் ஆட்கள் என்ன காரணத்திற்காக வருகிறார்; யாரை சந்திக்க வருகிறார்கள்; அவர்கள் வரும் நேரம் நிறுவனத்தை விட்டு வெளியேறும் நேரம் என்ன என்பதை வருகை பதிவேட்டில் குறித்து வைத்துக்கொண்டு அவர்களின் கையொப்பமிட்டு அவர்களின் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டுதான் உள்ளே அனுப்புவார் வெளியே அனுப்புவார்.

அவ்வளவு கண்ணும் கருத்துமாக வேலை செய்து கொண்டிருக்கும் கந்தசாமியை யாரும் குற்றம் குறை சொல்ல முடியாது .செய்யும் வேலையில் அவ்வளவு நேர்த்தி .கை சுத்தம் .இதனால் உடன் வேலை செய்யும் நண்பர்கள் கூட சில நேரங்களில் கந்தசாமியை கோபித்துக் கொள்வார்கள்.

கந்தசாமி நீ என்னதான் ரொம்ப நேர்மையா ஒழுங்கா வேலை செஞ்சாலும் இந்த நிறுவனத்தில் இருந்து எதுவும் கிடைக்கப் போறதில்லை . சும்மா அப்படி இப்படின்னு இருந்துட்டு காலத்தை தள்ளிட்டு போகாம ரொம்ப யோக்கியனா ரொம்ப நல்லவனா நீ இருக்க. நீ மட்டும் இருக்கிறதில்லாம உன்னைய காரணம் காட்டி எங்களையும் அப்படியே இருக்கச் சொல்றாங்க . வெளியே போ டீ குடி , இந்த நிறுவன கட்டிடத்தை யாரும் தூக்கிட்டு போக மாட்டாங்க என்று உடன் வேலை செய்யும் நண்பர்கள் சொன்னாலும் சிரித்துக் கொண்டே தான் இருப்பாரே ஒழிய அவர்களுக்கு எதிர் பதில் கூறி அவர்களை கோபப்படுத்தும் முயற்சியில் ஈடுபட மாட்டார் கந்தசாமி.

இந்த ஆள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான் பாேல. எப்படியோ போகட்டும் என்று வேலை செய்யும் ஊழியர்கள் கந்தசாமியின் நடவடிக்கைகளை தலையிடுவதில்லை.

அந்த நிறுவனத்திற்கு அவர் ஒருவர் போதும் எவ்வளவு பெரிய போலீஸ் படை கொடுக்கும் பாதுகாப்பைக் கொடுப்பார் கந்தசாமி என்று நிறுவனத்திற்கு தெரிந்திருந்தது.

இப்படி போய்க்கொண்டிருக்கும் நிறுவன வேலையில் அன்று காலை டூட்டி கந்தசாமிக்கு.

கப்பல் மாதிரியான ஒரு கார் உள்ளே நுழைந்தது .அதுவரை அந்த காரை கந்தசாமி பார்த்ததில்லை. வழி மறித்தார் காரின் நம்பரை எழுதினார். காருக்குள் யார் இருக்கிறது என்று கேட்டார். காரின் கதவு திறக்கவில்லை. டிரைவரிடம் கேட்டார் .அவனும் சரியான பதில் சொல்லவில்லை.

எவ்வளவோ முயன்று பார்த்தார்கள். அந்தக் காரை கந்தசாமி நிறுவனத்திற்குள் விடவே இல்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் வாட்ச்மேன் அருகில் இருந்த டெலிபோன் ஒலித்தது .ஓடிப்போய் போனை எடுத்தார் கந்தசாமி.

அப்போதுதான் வந்திருப்பது முதலாளியின் மகன் என்று தெரிந்தது. பதறி அடித்த கந்தசாமி தன்னை மன்னித்துக் கொள்ளும்படி காரின் டிரைவரிடம் சொல்லிக் கெஞ்சினார் .

அவரின் பதிலுக்கு காத்திராத அந்தக் கப்பல் வடிவக் கார் நிறுவனத்திற்குள் நுழைந்தது.

சிறிது நேரத்திற்கு எல்லாம் நிறுவன அலுவலகத்திற்குள் அழைக்கப்பட்டார் கந்தசாமி.

எப்படியும் தனக்கு வேலை போய்விடும். யார் எவர் என்று தெரியாமல் நாம் தவறு செய்து விட்டோம். நம்மை மன்னிக்க மாட்டார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் போட்டிருக்கும் இந்த யூனிஃபார்ம் கழட்டப்படும். செய்தது தவறு என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டு முதலாளி அறையை நோக்கி நகர்ந்தார் கந்தசாமி. கை கால் எல்லாம் விறைத்தது .முழுவதும் குளிரூட்டப்பட்ட முதலாளியின் அறைக்கு வெளியே மிக பவ்வியமாக அமர்ந்திருந்தார் கந்தசாமி .

முதலாளி அறையை விட்டு வெளியே செல்பவர்கள் எல்லாம் கந்தசாமியைப் பார்த்து சிரித்துவிட்டுப் போனார்கள். அந்தச் சிரிப்புக்கான அர்த்தம் அவருக்கு விளங்கவில்லை.

சிறிது நேரத்திற்கு எல்லாம் முதலாளி அறைக்கு அழைக்கப்பட்டார் கந்தசாமி.

என்ன கந்தசாமி, யார் என்னன்னு தெரியாம நீ பேசாம கார நிப்பாட்டி இருக்கிற. இது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? என்ன நினைச்சிட்டு இருக்க நீ என்று மிகவும் கோபமாக பேசினார் முதலாளி.

ஐயா நான் தப்பு பண்ணிட்டேன்; வந்தது உங்க பையன் எனக்கு தெரியல .என்னுடைய கடமை என்னுடைய கட்டளையை நான் செய்தேன் .தப்புதான் என்ன மன்னிச்சிடுங்க என்று கண்களில் கண்ணீர் மல்க பேசினார் கந்தசாமி .

அதெல்லாம் முடியாது. இப்போ உனக்கு என்ன சம்பளம் போடுறாங்க என்றார் முதலாளி

10 ஆயிரம் என்று பவ்யமாக பதில் சொன்னார் கந்தசாமி. இந்த மாசத்திலிருந்து உனக்கு இருபதாயிரம் ரூபா சம்பளம் ஞாயிற்றுக்கிழமை லீவு. தீபாவளிக்கு இரண்டு போனஸ். பொங்கலுக்கு மூணு போனஸ். இத நான் சொல்லல. என் பையன் தான் இது கொடுக்கச் சொன்னான் என்று சொன்ன போது முதலாளியின் மகன் அலுவலகத்திற்குள் நுழைந்தார். பதறிப்போன கந்தசாமி முதலாளியின் மகனை கையெடுத்துக் கும்பிட்டார்.

கந்தசாமியின் தோளைப் பிடித்து அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தார் முதலாளி மகன்

இல்லை ஐயா நான் நிக்கிறேன் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் கந்தசாமி.

இல்ல இங்க உட்காருங்க என்று சேரில் அமர வைத்தார் முதலாளியின் மகன். நடப்பது என்ன என்று தெரியாத கந்தசாமிக்கு கண்களில் கண்ணீர் பெருகியது.

ஐயா வணக்கம் நான் முதலாளியுடைய பையன் தான் ஆனா அதக் கூட பொருட்படுத்தாம இந்த நிறுவனத்துக்குள்ள புதுசா ஒரு கார் வருது. இந்தக் கார் எதுக்காக உள்ள வருது. இவங்க பணக்காரங்களா இருப்பாங்களோ இந்த காரை நாம ஏன் நிறுத்தனும் அப்படி நிறுத்துனம்னா நமக்கு ஏதாவது பிரச்சனைகள் வரும். அவங்க நம்ம திட்டுவாங்களா .அப்படி எல்லாம் எதுவும் பார்க்காம உங்க கடமை நீங்க சரியா செஞ்சீங்க. உங்களுக்கு கொடுத்த வேலையை தவறாமல் கடைப்பிடிச்சீங்க. அந்த நேர்மை தான் ஐயா உங்கள எனக்கு பிடிச்சிருக்கு. அதான் அப்பாட்ட சொல்லி உங்க சம்பளத்தையும் போனஸையும் உயர்த்தச் சொன்னேன் உங்கள மாதிரி உண்மையா இருக்கிற ஊழியர்கள்னால இந்த நிறுவனம் இன்னும் பெருசா வளரும் .ரொம்ப நன்றி என்று கந்தசாமியின் கையை பிடித்து குலுக்கினார் முதலாளி மகன்.

கந்தசாமிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென்று வழிந்தது.

அவரின் கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைத்தார் முதலாளி மகன் .

ஐயா தைரியமா நீங்க வேலை பாருங்க. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்க .நாங்க உங்க கூட இருக்கோம் என்று முதலாளியின் மகனும் முதலாளியும் சொல்ல,

நன்றிப் பெருகோடு குளிரூட்டப்பட்ட முதலாளியின் அறையில் இருந்து,

நிறுவன வாசலுக்கு நடக்கத் தொடங்கினார் கந்தசாமி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *