ஜெய்பூர், மார்ச் 2–
ராஜஸ்தானில் 5 குழந்தைகளுடன் கால்வாயில் குதித்து கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள கலிபா கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராம் (வயது 32). இவரது மனைவி பட்லி (30). இவர்களுக்கு ரமீலா (12), பிரகாஷ் (10), கேகி (8), ஜான்கி (6), ஹிதேஷ் (3) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று சங்கர் ராம், பட்லி ஆகியோர் தங்களது 5 குழந்தைகளுடன் சாஞ்சூரில் உள்ள நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களது ஆடைகள் மற்றும் செல்போன் ஆகியவை கால்வாய் கரையில் இருந்தது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. அதில் 6 பேரின் கைகள் ஒன்றொடு ஒன்று கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்பகுதியை சேர்ந்த சிலர் சங்கர் ராம் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தததாகவும், இது தொடர்பாக அந்த தம்பதியினர் பஞ்சாயத்து கூட்டம் கூட்டி நீதி கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த கூட்டத்திலும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி சங்கர் ராம் தனது குடும்பத்தினருடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ரூப் சிங் கூறுகையில், நேற்று மதியம் 2.30 மணிக்கு இந்த தம்பதி தனது குழந்தைகளுடன் இந்த கால்வாய் அருகே வந்துள்ளனர். அங்கு வந்த அவர்கள் தங்களின் மொபைல்போன் உள்ளிட்ட உடைமைகளை கால்வாய் கரையில் வைத்துவிட்டு கால்வாயில் குதித்துள்ளனர். இதில் முதலில் பிரகாஷ் என்ற சிறுவனின் உடல் மீட்பு படையினரால் 4 மணி அளவில் மீட்கப்பட்டது. அங்கிருந்து 200 மீட்டரில் மற்ற அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டன என்று தெரிவித்தார்.