நாடும் நடப்பும்

ராஜஸ்தானில் ராகுல்; லாட், பைலட் முதல்வர் பதவி சண்டையில் புது குழப்பம்


ஆர். முத்துக்குமார்


கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் பயணம் அக்கட்சிக்கு பயனுள்ளதா? பாதகமானதா? என்ற விவாதத்திற்கு பதில் அடுத்து வர இருக்கும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தான் நல்ல விடை தர முடியும்!

ஆனால் அடுத்த சில நாட்களில் ராஜஸ்தான் எல்லைக்குள் நுழையும் ராகுல் காந்தியின் நடைப்பயணம் ‘பூதங்கள் நிறைந்த ஜாடியை’ திறந்து விடுவது போன்றதாகவே அமையும். காரணம் பிரச்சனைகள் தானே தீர்ந்து விடும் என்று இருந்து விட்டது தான். அதன் பின்விளைவு ராகுலுக்கு மிகப்பெரிய சறுக்கலாக மாறும் அபாயம் எழுந்து வருகிறது.

கடந்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தேர்தல் நடைபெற்றது அல்லவா? அதில் மல்லிகார்ஜுன் கார்கேயும், சசிதரூரும் களமிறங்கியதும், அதில் கார்கே வெற்றி பெற்றதும் நினைவிருக்கலாம்.

அதற்கு சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்புடங தலைமை பொறுப்புக்கு தேர்தலில் குதிக்க இருப்பதாக கூறினார்.

இதற்கு பல பகுதிகளிலிருந்தும் வந்த கருத்து அசோக் கெலாட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மற்றொரு பொறுப்புக்கு தேர்தலில் நிற்கட்டும் என்று வந்தது.

இந்த சிக்கலில் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைமை வேண்டாம், முதல்வராகவே தொடர்கிறேன் என்று கூறிவிட்டார்.

பழுத்த அனுபவம் பெற்ற அசோக் கெலாட் 2018 சட்டமன்ற தேர்தலில்

200 இடங்களில் 108 எம்எல்ஏக்களை ஜெயிக்க வைத்து ஆட்சியைப் பிடித்தார்.

இந்த வெற்றியின் பின்னணியில் மிகப்பெரிய பங்கு சச்சின் பைலட்டுக்கு இருந்தது. அவரே முதல்வராகவும் வருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இறுதியில் சோனியாவும், ராகுலும் கெலாட்டே முதல்வர் என்று அறிவித்து விட்டனர். இதனால் மன வருத்தத்தில் இருந்த சச்சின் பைலட் கட்சியை விட்டு வெளியேறும் அறிகுறிகளை வெளியிட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் 19 எம்எல்ஏக்களுடன் டெல்லியில் உல்லாச ரிசார்ட்டில் முகாமிட்டு சோனியாவுக்கு தலைவலியாக மாறினார்.

பைலட்டிடம் ஆட்சியை பிடிக்கும் எண்ணிக்கை இல்லாத நிலையில் அஷோக் கெலாட்டையே அனுமதித்தார்.

குலாம் நபி ஆசாத், ஹிமந்த் பிஸ்வா, சிந்தியா வழியில் கட்சியை விட்டு வெளியேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஹிமந்த் வெளியேறியதால் வடகிழக்கு மாநிலத்தில் காங்கிரஸ் வலுவிழந்து பாரதீய ஜனதா வளர்ச்சிக்கு வழி பிறந்தது.

சிந்தியா வெளியேறியதால் அவரை பாரதீய ஜனதா தங்களது தேர்தல் பிரச்சார பீரங்கியாக உயர்த்தி மத்திய பிரதேசத்தில் காங்கிரசை தகர்த்து வெளியேற்றி ஆட்சியை பிடித்து விட்டது. ஹிந்தியாவிற்கும் மத்திய அமைச்சர் பொறுப்பில் அமர்த்தி கவுரவித்தது.

இம்முறை பைலட்டை உதாசீனப்படுத்தி, அசோக் கெலாட்டை ஆதரித்தால் ராஜஸ்தானில் 2024ல் நடைபெற இருக்கும் தேர்தலுக்கு அது மிகப்பெரிய பாதகமானதாக மாறும். காரணம் எனக்கு காங்கிரஸ் தலைமையாக விருப்பம் இல்லை என்று சோனியாவிடம் கூறியபோது அவருக்கு முதல்வர் பதவி மீதுள்ள மோகத்தை தெரியப்படுத்தினார்.

மறுபுறம் சச்சின் பைலட்டோ கெலாட்டை, தலைமை பொறுப்புக்கு தேர்தலில் நிற்க முடிவெடுத்தால் நீதான் முதல்வர் என்று கூறியதை நினைத்துக் கொண்டு தான் இருக்கிறார்.

அடுத்த சில நாட்களில் ராகுலின் நடைப்பயணம் ராஜஸ்தானில் நுழைய பைலட்டும், கெலாட்டும் தங்களது சச்சரவுகளை எல்லாம் மறந்து இணைந்து ராகுலுக்கு வரவேற்பு கொடுத்து நடைப்பயணத்திற்கு உத்வேகம் தருவார்களா? அல்லது நீயா? நானா? போட்டியில் உச்சத்தை தொட்டு ஒருவருக்கு ஒருவர் அடிதடி அரசியலில் இறங்குவார்களா?

இந்த நிலையில் பாரதீய ஜனதா ராஜஸ்தானில் மீண்டும் வெற்றிப் பெற உரிய உத்திகளை கையாண்டு காங்கிரசை எளிதில் வீழ்த்தும் முயற்சிகளில் இறங்கி விடுவார்கள்.

மொத்தத்தில் ராகுலின் நடைப்பயணம் ராஜஸ்தானில் நுழைய மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும், காங்கிரஸ் கட்சிக்கு அங்கு சட்டமன்ற தேர்தலிலும் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலிலும் அதன் பிரதிபலன் எதிரொலிக்கும்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *