செய்திகள்

ராஜஸ்தானில் உருமாறிய ‘கப்பா’ வகை கொரோனா: 11 பேர் பாதிப்பு

ஜெய்ப்பூர், ஜூலை 14–

ராஜஸ்தானில், இதுவரை 11 பேருக்கு கப்பா வகை உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, அந்த மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ரகு ஷர்மா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார், ஜெய்ப்பூர் பகுதிகளில் தலா நான்கு பேருக்கும், பார்மெர் பகுதியில் 2 பேருக்கும், பில்வாரா பகுதியில் ஒருவருக்கும் கப்பா வகை உருமாறிய கொரோனா தொற்று பாதித்திருப்பது தெரிய வந்துள்ளது. உருமாறிய அதிதீவிர கொரோனா வைரஸ்களில், டெல்டாவைக் காட்டிலும் ‘கப்பா’ வகை, பரவும் தன்மை சற்றுக் குறைந்தது என்றும் மாநில, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ரகு ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.

ஆல்பா குறைந்தது

நாட்டிலுள்ள 10 தேசிய ஆய்வகங்கள் இணைந்து கொரோனா தொற்று பரவல் குறித்த ஆய்வை நடத்தின. அந்த ஆய்வறிக்கையில், பிரிட்டனில் முதன் முதலில் உருமாறிய ‘ஆல்பா’ வகை கொரோனா பரவல், கடந்த ஒன்றரை மாதங்களில் இந்தியாவில் குறையத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் உருமாறிய கப்பா, டெல்டா தொற்று பரவல், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அதிகரித்துக் காணப்பட்டது. கப்பா, டெல்டா வகை, முதலில் மகாராஷ்டிரத்தில் மட்டுமே பரவி வந்தன. ஆனால், தற்போது மேற்குவங்கம், ஆந்திரம், டெல்லி, குஜராத், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் காணப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *