செய்திகள்

ராஜபாளையத்தில் நள்ளிரவு கணவன் – மனைவி, குழந்தைகளை கட்டிப்போட்டு 60 பவுன் நகைக் கொள்ளை

முகமூடி அணிந்து வந்த 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

ராஜபாளையம், பிப். 24–

ராஜபாளையத்தில் நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து கணவன் – மனைவி, குழந்தைகளை கட்டிப்போட்டு 60 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்து வந்த 5 பேர் கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது42). இவர் அங்குள்ள ஜவகர் மைதானத்தில் உடல் பருமன் எடை குறைப்பு மையத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி இந்துமதி (38). இவர்களுக்கு சந்தோஷ்(10) என்ற மகனும், சுவாதி(7) என்ற மகளும் உள்ளனர். இவர்களின் வீடு ஊரின் ஒதுக்குபுறத்தில் உள்ளதால் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும்.

இந்த நிலையில் நேற்று இரவு முருகானந்தம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைக்கும் சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த முருகானந்தம் குடும்பத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க 5 பேர் முகமூடி அணிந்து கதவை உடைப்பது தெரியவந்தது. சிறிது நேரத்தில் அந்த கும்பல் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தது. பின்னர் முருகானந்தத்தை சரமாரியாக தாக்கிய அவர்கள் வாயில் துணியை திணித்து கையை கயிற்றால் கட்டினர். தொடர்ந்து இந்துமதி மற்றும் 2 குழந்தைகளையும் அந்த கும்பல் கயிற்றால் கட்டிப்போட்டது.

ரூ. 30 லட்சம்

அதன் பின் அவர்கள் வீட்டின் பீரோவை திறந்து அதில் இருந்த 60 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் இந்துமதி அணிந்திருந்த தாலிச்செயினையும் பறித்துக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். இன்று காலை வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது முருகானந்தம், இந்துமதி மற்றும் 2 குழந்தைகள் மயக்க நிலையில் இருந்தனர். உடனே பொதுமக்கள் அவர்களின் கைகளில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து நடந்த விவரங்களை கேட்டறிந்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. நாகராஜன், ஏ.டி.எஸ்.பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த நபர்கள் நடத்திய இந்த கொள்ளை சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *