சபாநாயகர் மீது காகிதம் வீச்சு: இரு அவைகளும் ஒத்திவைப்பு
புதுடெல்லி, மார்ச் 27–
ராகுல் காந்தி பதவி நீக்கம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் பார்லிமெண்டின் இரு அவைகளும் இன்று துவங்கிய ஒரு நிமிடத்திலேயே ஒத்தி வைக்கப்பட்டது.
பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 9வது நாள் அமர்வு தொடங்கியதும் ராகுல் காந்தி சிறை மற்றும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் ஆளும் பாஜக எம்பிக்கள் ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவதூறு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ராகுலை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் முழக்கமிட்டனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்க கோரி, சபாநாயகர் இருக்கை முன்பு சென்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பி-க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் மீது காகிதம் மற்றும் பதாகைககள் வீசப்பட்டன.
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால் மக்களவை மாலை 4 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி பதவி பறிக்கப்பட்டத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து இருந்தனர்.
இதனிடையே, ராகுல் காந்தியின் பதவி பறிப்பு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்முறையாக திரிணாமுல் காங்கிரசும் பங்கேற்றுள்ளது.