திருவனந்தபுரம், மார்ச் 30–
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்திக்கு எதிரான பாஜக மாநில தலைவர் மீது 242 கிரிமினல் வழக்குகள் உள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவில், கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தில் அதாவது வரும் ஏப்ரல் 26 ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, தொடர்ந்து 2வது முறையாக கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பாஜக கேரள மாநில தலைவர் சுரேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால், இந்த தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
242 கிரிமினல் வழக்குகள்
இந்நிலையில் தேர்தல் ஆணைய விதிகளின்படி, வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகளின் விவரங்களை விளம்பரப்படுத்துவது கட்டாயம். அந்த வகையில் சுரேந்திரன் மீதான வழக்குகள் தொடர்பான விளம்பரம் ஒன்று, அண்மையில் கட்சி சார்பிலான செய்தித்தாளில் 3 பக்கத்திற்கு இடம்பெற்றுள்ளது. அதன்படி, வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடும் சுரேந்திரன் மீது 242 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அதில், 237 வழக்குகள் சபரிமலை போராட்டங்கள் தொடர்பானவை எனவும், 5 போராட்டங்கள் கேரளாவில் பாஜக முன்னெடுத்த பல்வேறு போராட்டங்கள் தொடர்பானவை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, எர்ணாகுளம் தொகுதி பாஜக வேட்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மீது சுமார் 211 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
2020ம் ஆண்டு பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்ட சுரேந்திரன், 2009 முதல் மூன்று மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். 4 முறை சட்டமன்றத் தேர்தல்களிலும் களமிறங்கியுள்ளார். அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.