திருவனந்தபுரம், பிப். 27–
மக்களவைத் தேர்தலையொட்டி கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவின் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அக்கட்சி சார்பில் கட்சியின் மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம், பனியன் ரவீந்திரன், ஆனி ராஜா, விஎஸ் சுனில் குமார், சிஏ அருண்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் ராகுல் காந்தி தற்போது எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஆனி ராஜா மிகுந்த கவனம் பெற்றுள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி உ.பி.யின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் ஸ்மிருதி இராணியிடம் அவர் தோல்வியுற, வயநாட்டில் வெற்றி பெற்றார்.
வேட்பாளராக ஆனி ராஜா
இந்நிலையில் இந்தமுறை வயநாட்டில் அவருக்கு எதிராக வலுவான வேட்பாளராக ஆனி ராஜாவை இந்திய கம்யூனிஸ்ட் களமிறக்கியுள்ளது. ஆனி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து ஆனி ராஜா அளித்த பேட்டியில், ‘எல்டிஎஃப் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் நீண்ட காலமாக இந்த 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இம்முறையும் இந்த 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இங்கே போட்டி எல்டிஎஃப்-க்கும் யுடிஎஃப்-க்கும் இடையேதான். இங்கே அந்த நிலை மாறவில்லை. கடந்த முறையும் வயநாட்டில் சிபிஐ போட்டியிட்டது. அதேபோல் இந்த முறையும் களம் காண்கிறோம்’ என்றார்.
வயநாட்டில் ஆனி ராஜாவை வேட்பாளராக அறிவித்தது குறித்தும், ராகுல் காந்தி மீண்டும் அங்கு களமிறக்கப்பட்டால் சிபிஐ எப்படி எதிர்கொள்ளும் என்பது பற்றியும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் கூறுகையில், ‘வயநாட்டில் ராகுல் காந்தியை காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தட்டும். ஆனால் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜகவை எதிர்க்கிறதா அல்லது இடதுசாரி ஜனநாயக முன்னணியை எதிர்க்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.