உஜ்ஜைன், டிச.1–
உஜ்ஜைன் நகரில் ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் பங்கேற்றார்.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் வழியாக மத்திய பிரதேசத்தை கடந்த வாரம் புதன்கிழமை எட்டியது. அந்த மாநிலத்தின் காந்த்வா மாவட்டம், பார்கான் பகுதியில் இருந்து தனது 2வது நாள் நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியபோது பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரைஹன் வதேரா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது மக்கள், இளைஞர்கள், சிறுவர் –சிறுமிகள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 2 நாட்கள் தொடர்ந்து ராகுலுடன் பிரியங்காவும் நடைபயணம் மேற்கொண்டார்.
இன்று யாத்திரையின் 83வது நாளாகும். இன்று காலை உஜ்ஜைனில் அவர் மேற்கொண்ட யாத்திரையின்போது உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் இணைந்து கொண்டனர்.
இது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
முன்னதாக, ஸ்வரா பாஸ்கர் ராகுல் காந்தியையும், இந்திய ஒற்றுமை யாத்திரையையும் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அமோல் பலேகர், சந்தியா கோகலே, பூஜா பட், ரியா சென், சுஷாந்த் சிங், மோனா அம்பேகான்கர், ரஷ்மி தேசாய் மற்றும் அகன்ஷா பூரி போன்ற சினிமா பிரபலங்கள் யாத்திரையில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.