சென்னை, ஆக.5-–
ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
2019- நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி குறித்து பேசிய பேச்சு மோடி சமூகத்தையே இழிவு படுத்திவிட்டதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சூரத் கோர்ட் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.
சூரத் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதற்கு வரவேற்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
நீதி வென்றது! வயநாடு ராகுல்காந்தியைத் தக்க வைத்துக்கொண்டது.
அவதூறு வழக்கில் சகோதரர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கும் சுப்ரீம் கோர்ட்டின் முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்த உத்தரவு நமது நீதித்துறையின் வலிமை மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையையும், மக்களாட்சியின் மாண்புகளைக் காப்பாற்ற வேண்டியதன் முக்கியத்து வத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.