தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து
பாட்னா, ஜன. 8–
காங்கிரஸ் ஒரு பேரியக்கம், ராகுல் காந்தி மாபெரும் தலைவர், அவருடைய பயணத்துடன் என்னுடைய பயணத்தை ஒப்பிட வேண்டாம் என இந்திய ஒற்றுமை பயணம் குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், “ஜன் சூரஜ் யாத்ரா” என்ற பெயரில் பீகார் மாநிலம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இது பிரசாந்த் கிஷோரின் நேரடி அரசியல் அத்தியாயத்தின் தொடக்கம் என்று கூட சொல்லலாம். இதன் முடிவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போகிறாரா? இல்லை வேறு ஏதேனும் திட்டங்கள் வைத்திருக்கிறாரா? என்பது தெரியவரும்.
இந்த பயணத்தின் போது பிரசாந்த் கிஷோர் கூறும் கருத்துகள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக பிகாரில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணி குறித்து தாக்கி பேசி வருகிறார். இந்நிலையில் ராகுல் காந்தி பற்றியும், அவரது இந்திய ஒற்றுமை பயணம் பற்றியும் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
இந்திய ஒற்றுமை பயணம்
பிகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டம் மொதிஹரியில் பிரசாந்த் கிஷோரிடம் ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கும், ஜன் சூரஜ் யாத்ராவிற்கும் இடையில் உள்ள ஒற்றுமை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் ஒரு பேரியக்கம். ராகுல் காந்தி பெரிய மனிதர். அவரது பயணத்தையும், என்னுடைய நடைப்பயணத்தையும் ஒப்பிட வேண்டாம்.
தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார். இதற்காக 3,500 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து கொண்டிருக்கிறார். என்னை பொறுத்தவரை கிலோமீட்டர் என்பது ஒரு விஷயமே கிடையாது. நான் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வு காண செல்கிறேன். எனவே என்னுடைய பயணத்தை ராகுலுடன் ஒப்பிட வேண்டாம் எனக் கூறியுள்ளார்.