செய்திகள்

ராகுல் காந்திக்கு தனது சொத்தை எழுதிய உத்தரகாண்ட் மூதாட்டி

டேராடூன், ஏப்.5–

ராகுல் காந்தியின் கொள்கை, கோட்பாடுகள் நாட்டுக்கு மிக அவசியம் என கூறியுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தனது சொத்துகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெயரில் எழுதி நீதிமன்றத்தல் சமர்ப்பித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் புஷ்பா முஞ்சியால். இவருக்கு வயது 78. இவர் தனது சொத்துகள் அனைத்தையும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பெயருக்கு மாற்றி உயில் எழுதி வைத்துள்ளார். ராகுல் காந்தியின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் நாட்டுக்கு மிக அவசியம், அதன் காரணமாகத் தனது சொத்துகளை ராகுல் காந்தி பெயரில் எழுதி வைப்பதாக அவர் கூறியுள்ளார்.

ரூ.50 லட்சம், 10 பவுன் நகை

உத்தரகாண்ட் காங்கிரஸ் மெட்ரோபாலிட்டன் தலைவர் லால்சந்த் சர்மா முன்னிலையில் உயில் எழுதிய இவர், அதை டேராடூன் நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார். இதுகுறித்து லால் சந்த் சர்மா கூறுகையில், ராகுல் காந்தியின் பெயரில் எழுதி வைக்கப்பட்ட சொத்துக்கான ஆவணங்களை முன்னாள் மாநிலத் தலைவர் பிரிதம் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நாட்டுக்காக இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் இந்த நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அதேபோன்று ராகுல் காந்தியின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்டேன் என்றும் அவர் கூறியதாக லால் சந்த் சர்மா தெரிவித்துள்ளார். மொத்தம் வங்கியில் உள்ள 50 லட்சம் ரூபாய், 10 சவரன் நகை ஆகியவற்றை ராகுல் காந்தியின் பெயரில் மாற்றியுள்ளார் புஷ்பா முஞ்சியால்.

Leave a Reply

Your email address will not be published.