செய்திகள்

ராகுல்காந்தி மீதான வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்

மதுரை, ஆக. 28–

பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிந்த ராகுல்காந்தி மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிய மனு, செப்டம்பர் 3 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

டில்லியில், பட்டியலினத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி, அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை பொதுவெளியில் பகிர்வது குற்றம் என்பதால், ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கை முடக்க, பாஜக அரசின் அழுத்தத்தால், இந்திய குழந்தைகள் நல ஆணையம் டுவிட்டருக்கு கோரிக்கை விடுத்ததாக, ராகுல் குற்றம் சாட்டினார். அதன்படி, ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

ராகுல் மீது வழக்கு

இந்நிலையில், ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் (போக்சோ சட்டத்தின்) கீழ் ராகுல்காந்தி, மாணிக்தாகூர், கே.சி.வேணுகோபால் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த முகமதுரஸ்வி என்பவர், ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பிரவீனகுமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் முகமது ரஸ்வி தரப்பில் வழக்கறிஞர்கள் முத்துக்குமார், நீலமேகம் ஆகியோர் ஆஜராகிய நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *