செய்திகள்

ரஷ்ய ராணுவத்தில் பணியில் சேர்ந்த குஜராத் இளைஞர் உக்ரைனில் மரணம்

காந்தி நகர், பிப். 26–

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி வந்த குஜராத்தைச் சேர்ந்த இளைஞர், உக்ரைன் போர்முனையில் வீரமரணம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து உக்ரைனில் உயிரிழந்த குஜராத்தைச் சேர்ந்த ஹேமில் அஸ்வின்பாய் மங்குகியாவின் உறவினர்கள் கூறி இருப்பதாவது:–

உக்ரைனில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் கடந்த 23 ந் தேதி ஹேமில் கொலை செய்யப்பட்டதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஹேமிலுடன் பணியாற்றி வந்த அவரது நண்பர்தான், தங்களது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒரே மாதத்தில் பலி

முதலில், இதனை நாங்கள் நம்பவில்லை. பிறகு மற்ற வழிகளில் இதனை உறுதி செய்துகொள்ள முயன்றோம். துரதிருஷ்டவசமாக இது உண்மை என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் கூறும்போது, 12 வது வரை மட்டுமே படித்த ஹேமில் வெளிநாடு செல்ல வேண்டும் என்று பல நாள்களாக நினைத்து வந்த நிலையில், சாதாரண விசாவில் ரஷ்யா சென்றதாகவும், ரஷ்ய ராணுவத்துக்கு உதவியாளர்கள் தேவை என்று வந்த விளம்பரத்தைப் பார்த்து அந்தப் பணியில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு சில நாள்களுக்கு முன்புதான், அவரது வங்கிக் கணக்கில், முதல் மாதச் சம்பளம் வந்ததாகவும், அதற்குள் அவர் இறந்துவிட்டார் என்றும் அவருடைய உறவினர்கள் கலங்கியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *