செய்திகள் நாடும் நடப்பும்

ரஷ்ய எதிர்ப்பு அரசியலை அமெரிக்கா நிறுத்துமா?


ஆர். முத்துக்குமார்


ஒரு வழியாக அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நேருக்கு நேர் மோதப் போவது தற்போதைய ஜனாதிபதி பைடனும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்பும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இவர்களில் யார் ஜெயித்தால் உலக அமைதிக்கு நல்லது? பொருளாதார வளர்ச்சிகளுக்கும் உகந்தது என்பன பற்றிய விவாதங்கள் எழ ஆரம்பித்தும் விட்டது.

சர்வதேச அரசியலில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை எதிர்க்கும் நோக்குடன் செயல்பட்டு வரும் அமெரிக்காவின் கொள்கை மாற்றம் இருவரில் யார் வந்தால் நன்றாக இருக்கும்? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் போர் பதட்டம் குறையும் வாய்ப்பும் நிச்சயம் அரும்பும்.

அதிரடி அரசியல் செய்யும் டிரம்பு – ரஷ்யா மீது தூர்வாரி தூற்றும் அரசியலில் ஈடுபாடு காட்டாமல் இருப்பது ஆச்சரியம் தான்!

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் சர்வதேச அரசியலில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்புகளை பெற்றவராக இருக்கும் தற்போதைய ஜனாதிபதி பைடன் ரஷ்யாவை பிளந்து அவர்களை மண் கவ்வ வைக்க துடித்துக் கொண்டிருப்பதுடன் தனியாக நேரடியாக ரஷ்யாவுடன் சண்டை போட்டால் தங்களுக்கும் இழப்புகள் ஏற்படும் என்பதால் ஐரோப்பிய நாடுகளை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு உக்ரைனை முன்நிறுத்தி ரஷ்யாவை குறி வைத்து தாக்குவதற்கு உத்தரவு பிறப்பித்து சர்வதேச குழப்பங்களை ஏற்படுத்தி வருவதை உலகமே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.

பைடன் ரஷ்யாவுக்கு தலைவலி என்றால் டிரம்போ சீனாவுக்கு தலைவலி! இப்படி இரு தலைவர்களும் இதர வல்லரசு பொருளாதாரங்களை உரசிப் பார்த்து வருகிறார்கள்.இது பல்வேறு உலக சிக்கல்களுக்கு இடையே அமைதிப் பூங்காவாக திகழும் ஆசியக் கண்டத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஜனவரி 2021ல் தன் தோல்வியைப் பொறுக்காது டிரம்ப் அமெரிக்க அதிகாரத் தலைநகர் வாஷிங்டனில் நடத்திய திடீர் தாக்குதல் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்ட உள்நாட்டு புரட்சியாளர்களின் கலவரத்தை நினைவுபடுத்தியது.

அடுத்த ஆண்டே, பிப்ரவரி 2022ல் பைடன் உக்ரைனுக்கு நிதி உதவிகள், ஆயுத சப்ளை மற்றும் நாட்டோ கூட்டணி நாடுகளின் முழு ஆதரவையும் தந்து ரஷ்யா மீது போர் தொடுத்தார்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா உடனடியாக களம் இறங்கி உக்ரைனைக் கட்டுக்குள் வைத்தும் வருகிறது.

ரஷ்யாவை எதிர்த்து நடத்தும் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் தேவையற்ற யுத்தத்தால் அமெரிக்காவுக்கும் பல தரப்புகளில் பின்னடைவு என்பதை உணர்ந்து அந்நாட்டு அரசியல்வாதிகள் ஒன்று கூடி பைடனின் ரஷ்யா மீதான வெறித்தனமான செயல்களுக்கு நிதி ஆதரவு கிடையாது என்று அறிவித்து எந்த உதவியையும் தர முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்.

ஆக நவம்பர் 5, 2024 தேர்தல் நாளில் அமெரிக்க வாக்காளர்கள் யாரைத் தேர்வு செய்தாலும் உலக அமைதி திரும்புமா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கப் போவதில்லை!

மேலும் அமெரிக்காவின் கெடுபிடி அரசியல் காரணங்களால் ஐரோப்பிய நாடுகளும் குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளும் உக்ரைனுக்கு தங்களது கையிருப்பு ராணுவ தளவாடங்களை தந்துவிட்டு கையில் சொற்ப ஆயுதங்களுடன் கைகளை பிசைந்தபடி கிட்டத்தட்ட நிராயுதபாணியாய் நிற்பது பரிதாபத்துக்குரியதாகும்.

தற்போது ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நேற்று வரை நடந்து முடிந்தும் விட்டது! அதாவது அடுத்த ஜனாதிபதியாக புதினைத் தேர்வு செய்வது உறுதியாகி விட்டது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்க இருக்கும் நாள் வரும் முன் ரஷ்யாவில் புதுத் தலைவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்று அமெரிக்காவின் கெடுபிடி சர்வாதிகார ஆட்சியின் கொடூர முகத்தை கிழித்து உண்மை முகத்தை உலகிற்கு வெட்டவெளிச்சம் போட்டு காட்டிட ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கலாம்.

இதுவரை தற்காப்பு என்ற ஆயுதத்தை உபயோகிக்கலாம். அப்படி ஒரு நிலையில் அமெரிக்காவின் மீது ரஷ்யா நேரடி தாக்குதல்களை துவக்கினால் அது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சறுக்கல்களுக்கு அல்லவா ஆரம்ப புள்ளியாக வரலாறு பேசும்!

இதுவரை ரஷ்யா கண்ணியம் காத்து அமெரிக்கா மீது எந்த தாக்குதலையும் நடத்தவே இல்லை அல்லவா? அந்த நிலை தொடர வேண்டும் என்பதே யுத்த துறைகள் பற்றிய நிபுணர்களின் விருப்பம். பல நாடுகளின் ஆசையும் அது தான்.

ஆனால் அமெரிக்கா அவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுமா? அப்படி ஒரு செயல் திட்டம் கொண்டவராக இருக்கப்போவது டிரம்பா? பைடனா? அடுத்த 9 மாதங்களில் அதாவது வாக்குப் பதிவு முடிந்த சில நாட்களில் வெளிவரும் முடிவுகள் தான் உரிய பதிலைத் தரும்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *