செய்திகள்

ரஷ்யா– உக்ரைன் அமைதி ஒப்பந்தம்

Makkal Kural Official

வாஷிங்டன், டிச. 29:

ரஷ்யா–உக்ரைன் அமைதி ஒப்பந்தத்திற்கு எப்போது இல்லாத அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 20 அம்ச அமைதி திட்டத்தில் 90 சதவீதம் ஜெலன்ஸ்கி சம்மதித்துள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான 4 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அமைதி ஒப்பந்தம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார்.

இதனையடுத்து இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்துப் பேசினர்.

அதிபர் டிரம்ப் கூறியதாவது:

ஜெலன்ஸ்கி உடன் சந்திப்பு அற்புதமானது. அவருடன் நிறைய விவாதித்தேன். அமைதி ஒப்பந்தத்திற்கு எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 20 அம்ச அமைதி திட்டத்தில் 90 சதவீதம் ஜெலன்ஸ்கி சம்மதித்துள்ளார்.

இரண்டாம் உலக போருக்கு பிறகு, மிக கொடிய போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அவர்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். ஏராளமான மக்கள் உயிரிழந்துவிட்டனர். தற்போது இரு அதிபர்களும் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள்.

எல்லோரும் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள். ஆனால் இரு நாடுகளின் தலைவர்களுடனான புதிய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இப்பிரச்சினையில் வெளிப்படையான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

நான் அதிபர் புதினுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப் போகிறேன், நாங்கள் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதாவது:–

நாங்கள் சிறந்த கலந்துரையாடலை நடத்தினோம், மேலும் இந்தச் சமீபத்திய வாரங்களில் அமெரிக்க மற்றும் உக்ரைன் குழுக்கள் பேச்சுவார்த்தை வாயிலாக அடைந்த முன்னேற்றத்தை நாங்கள் பாராட்டுகிறோம். உக்ரைன் அமைதிக்குத் தயாராக உள்ளது என்றார்.

ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனும் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது ரஷ்யா அமைதி விஷயத்தில் “தீவிரமாக” இருப்பதாக புதின் வலியுறுத்தினார்.

அதிபர்கள் புதின் மற்றும் டிரம்ப் ஆகியோருக்கு இடையேயான தொலைபேசி அழைப்பு குறித்து ரஷ்ய ராஜதந்திர ஆலோசகர் யூரி உஷாகோவ் கூறுகையில், “தற்காலிக போர்நிறுத்தத்திற்கான உக்ரைன் மற்றும் ஐரோப்பிய முன்மொழிவு மோதலை நீட்டித்து, மீண்டும் மோதலை தொடங்கவே வழிவகுக்கும். சண்டையை தற்காலிகமாக நிறுத்துவது என்பது உக்ரைன் மீண்டும் ஆயுதம் ஏந்த வாய்ப்பாக அமையும். தற்காலிக தீர்வுக்கு பதிலாக, மோதலின் மூல பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு இறுதித் தீர்வையே ரஷ்யா விரும்புகிறது” என்றார் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *