செய்திகள் நாடும் நடப்பும்

ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சு வார்த்தைகள் : தளம் அமைக்க தயாராகும் இந்தியா


நாடும் நடப்பும்


உக்ரைனில் ரஷ்ய படைகள் நுழைந்து அங்கு ஆட்சி மாற்றத்திற்கான ராணுவ தாக்குதலை நடத்தி வருவது ஒரு மாதமாகி விட்டது. இந்நிலையில் உலக பொருளாதாரம் சந்தித்து வரும் பல்வேறு சறுக்கல்கள் மற்றும் சிக்கல்களை கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இது வரை அரங்கேறிய காட்சிகள் நமக்கு சுட்டிக்காட்டும் உண்மைகள் என்ன? முதலாவது முக்கிய அம்சம் ரஷ்ய ஜனாதிபதி புதின் எதற்கும் துணிந்துதான் தற்போதைய தாக்குதலை துவக்கி உள்ளார்.

அதாவது பின் விளைவுகள் மிக பாதகமானதாகவே இருக்கும் என்பதை நன்கு உணர்ந்தே இப்போரை அவர் துவக்கி உள்ளார். ஏதோ உலக வர்த்தக குழப்பத்திற்கு வித்திடவே இப்படி ஒரு யுத்தம் என்று பலர் கருத்து கூறி வந்தாலும் தனது லட்சியம் என்ன? வேண்டுவது என்ன? என்பதை தெளிவாகவே விவரித்து விட்டது. சரியான பதில் ஏதும் வராததாலும் மேலும் நாட்டோ அணிகள் ரஷ்யாவின் கோரிக்கையான உக்ரைனை நாட்டோவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது தான்.

நாட்டோவில் சேர்த்தால் நாட்டோ படையினர் எளிதில் ரஷ்யா மீது வேவு பார்க்கலாம்.

அது மட்டுமா? நாட்டோ நாடுகளால் தங்களது ஆயுதக் கருவிகளை உக்ரைனுக்கு தர மாட்டோம் என்று ஒரு பக்கம் கூறி வந்தாலும் அவர்களிடம் வாங்கிய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு அனுப்பி வைத்துவிடலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

மொத்தத்தில் வல்லரசு நாடுகள் போர்க் காட்சிகளை நிறுத்திக் கொள்ளும் நேரம் வருவதாகத் தெரியவில்லை.

இதற்கிடையே ரஷ்ய குழுமம் ஒன்று துருக்கியின் தலைநகர் இஸ்தான்புலில் தரையிறங்கி விட்டது. அந்தக் குழுமம் விரைவில் உக்ரைனில் இருந்து வர இருக்கும் ஓர் உயர்மட்ட குழுவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்த இருக்கிறார்கள்.

சென்ற வார இறுதியில் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசும் போது தான் இந்த பேச்சுவார்த்தைகளுக்கு இடைஞ்சல் இல்லாமல் நடுநிலை நாடாக இந்த அழைப்பை விடுத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக தெரிவித்தார்.

இது வரை ரஷ்யா – உக்ரைன் உயர்மட்ட குழுமங்கள் மூன்று முறை நேருக்கு நேர் சந்தித்து பேசி உள்ளனர். மற்றும் நான்காவது முறையாக வீடியோ கான்பரன்சிங் பேச்சுவார்த்தை ஆகும்.

அந்த நான்கு பேச்சுக்கு பிறகு இரு தரப்பிலும் எந்த மன மாற்றமும் ஏற்படாமல் போர் பதட்டமும் குறையாமல் பதட்டமான சூழ்நிலை அப்படியே தொடர்கிறது.

தற்போதைய நிலையில் துவங்க இருக்கும் துருக்கி பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவை ஏற்படுத்துமா? என்பது கேள்விக்குறி தான் என்றாலும் இப்படிப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்வதும் என்றேனும் மன மாற்றம் ஏற்பட வழி காண முடியும் என்ற நம்பிக்கை தருகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சர்வாதிகார பலத்தை காட்டவே களம் இறங்கி இருப்பதை பார்க்கும்போது, எல்லா நாடுகளுடனும் நல்லுறவு கொண்டிருக்கும் இந்தியாவும் ரஷ்யா –- உக்ரைன் போர் பதட்டம் நீடிக்காது இருக்க ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.

ரஷ்யா, சீனா, இந்தியா முத்தரப்பு கூட்டணியின் பலமே நம்மிடம் இருக்கும் சொந்தப் பிரச்சனைகள் குறிப்பாக அரசியல் பிரச்சினைகளை முன்வைக்காது பன்முக உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது வாக்கெடுப்பிலிருந்து விலகி நின்ற 35 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

உக்ரைன் போர் தொடர்பாக ஐநா பொது அவையைக் கூட்ட வேண்டுமென்ற பாதுகாப்பு அவையின் வாக்கெடுப்பிலும் இந்தியா கலந்து கொள்ளவில்லை. போர் நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனத் தீர்மானததை நிறைவேற்றுவதிலிருந்து இந்தியா விலகி நின்றதற்குத் தனிப்பட்ட முயைில் அது எதிர்கொண்டிருந்த சாவல்களே முக்கிய காரணம். ஆயிரக்கணக்கான மாணவர்கள் போர் பதட்டம் நிறைந்த பகுதிகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நிலையில் இந்தியாவின் ஒரே நோக்கம் அந்த மாணவர்கள் பாதுகாப்புடன் நாடு திரும்ப வேண்டும் என்பதாகவே இருந்தது. மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரும் பணியில் 50க்கும் மேற்பட்ட ரஷ்ய மொழி பேசும் வெளியுறவுத் துறை அதிகாரிகளை ஈடுபடுத்தியதோடு சூழலுக்கேற்ப உடனடி முடிவுகளை எடுக்க வசதியாக வெளியுறவு இணைச் செயலர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

இன்று அதே வழியில் ரஷ்யாவிடம் நம்மால் உயர்மட்ட பேச்சு வார்த்தைகள் நடத்திட வழி இருப்பதால் அவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு வழி என்ன? என்பதையும் ஆலோசிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, நிலக்கரி தட்டுப்பாடு என பல்வேறு தட்டுப்பாடுகள் துவங்கி விட்ட இந்நிலையில் போர் பதட்டம் குறைய நாம் எடுக்கும் முயற்சிகள் சர்வதேச அரங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விடும்., அதுவே நமக்கு பெருமையாகும்.


Leave a Reply

Your email address will not be published.