ஆர். முத்துக்குமார்
சமீபத்து பொருளாதாரக் குறியீடுகள் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை உலகிற்கு நமது வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு அம்சங்களை பறை சாற்றுகிறது. கடந்த ஆண்டு இறுதி வரை பல முன்னணி பொருளாதாரங்களின் தலைவர்கள் நம் மண்ணின் பெருமைகளையும் வளர்ச்சி அறிகுறிகளையும் பார்த்து மகிழ்ந்த பரவசத்துடன் ஊர் திரும்பினர்.
அவர்கள் கண்ட நிஜங்களில் நாம் சாப்ட்வேர் துறையில் சாதித்ததன் பின்னணியில் நமது மனிதவளமும் ஓரு அதிமுக்கிய அம்சம் என்பதையும் தான்!
நாம் இன்று தனிநபர் வருமானம் ஆண்டிற்கு மூன்று லட்சம் ரூபாய் அதாவது மாத சராசரி வருமானம் ரூ.25,000 என்று இருக்கிறது.
சீனாவில் தனிநபர் வருமானம் மாதம் ரூ.80,000. அமெரிக்கர்களின் தனிநபர் மாத வருமானம் ரூ.2,54,000 ஆகும்.
இந்த கட்டத்தில் நாம் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய பொருளாதாரங்களுக்கு அடுத்ததாக ஐந்தாவது இடத்தில் உலக முன்னணி பொருளாதார பட்டியலில் இடம் பிடித்துள்ளோம்.
அமெரிக்கர்களின் அபார பொருளாதார வளர்ச்சியில் கல்வித்துறையில் முதலீடுகளை அதிகரித்ததன் பின்னணியே அதிமுக்கிய காரணமாகும்.
சீனா, ஜப்பான், ஜெர்மனி நாடுகளின் பொருளாதா வளர்ச்சியின் பின்னணியில் தொழில்துறை வளர்ச்சிகளின் மேன்மையே காரணம் என்பதை அறிவோம்.
அமெரிக்கர்களும் ஐரோப்பிய நாடுகளும் திடீரென தொழில் வளத்தை அதிகரித்து குறைந்த விலையில் அதிஉயர்தர கருவிகளை உருவாக்கப் போகிறோம் என முடிவு எடுத்தால் அது சாத்தியமா?
அவர்கள் நாட்டு சட்டத்திட்ட அடிப்படையில் இயற்கை வளங்களை அழித்துவிடாமல் வளர்ச்சிகளைக் காண ஆசை படுவதால் பலவித கட்டுப்பாடுகள் இருக்கிறது.
ஆனால் மனித வளமும் பரந்துவிரிந்த நிலப்பரப்பையும் கொண்ட சீனா மேற்கொண்ட தொழில் புரட்சி காரணமாக உலக நாடுகள் சீனாவுடன் வர்த்தக உறவுகளை பலப்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.
அமெரிக்காவும் தனது கெடுபிடி அரசியல் சமார்த்தியத்தை ஆசியாவின் அமைதியை பற்றியும் அக்கறையின்றி கொரியா, ஜப்பான், தைவான், தாய்லாந்து போன்ற சிறுசிறு நாடுகளில் தங்களது ராணுவ வலிமையையும் பொருளாதார நடமாட்டத்தையும் உறுதி செய்துகொண்டிருக்கின்றன. மறைமுகமாக சீனாவின் வளர்ச்சிகளை கட்டுப்படுத்த தான் என்பதை மறந்து விடக்கூடாது.
சீனா மட்டுமின்றி, வளர்ந்து வரும் நமது பொருளாதார வளர்ச்சிகளையும் கண்டு அவர்கள் நம்மை ஆதிக்கம் செலுத்த பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருவதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா கண்ட மிகப்பெரிய வெற்றி மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தது தான்! அதன் பின்னணியில் பக்கபலமாக இருந்தது ரஷ்யாவாகும்.
நமது கூடங்குளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் பலமாகக் கொண்ட தொழில்நுட்பங்களுடன் நிர்மானித்த கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலயத்தின் பயனாக நாம் தற்சமயம் 3000 மெகாவாட் பெற்றுக்கொண்டு இருக்கிறோம். இது தென்னிந்தியாவின் தேவைகளை 60% வரை பூர்த்தி செய்துவிடும்!
அடுத்த 3 ஆண்டுகளில் இதன் மின் தயாரிப்பு திறன் 6000 மெகாவாட்டாக இரட்டிப்பாக இருக்கும்றது. 2027ல் நம் தேசமே மின்மிகை நாடாக உயர்ந்து விடுவோம்.
இது தொழில்துறைக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் ஆக்கப்பூர்வமான உந்துசக்தியாக இருக்கப் போகிறது.
சாப்ட்வேர் துறையில் தகவல் திரட்டுக்களின் அவசியத்தை உணர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அங்கு அறிவித்தது: இந்தியா விரைவில் தகவல் திரட்டு புரட்சியில் சாதிக்கப் போகிறது; அதன் முதல் அடியாய் நம் மண்ணின் தகவல்கள் உள்நாட்டு சர்வர்களில் மட்டுமே சேமித்து வைக்கப்படும் என்பதாகும். வெளிநாட்டு சர்வர்களில் சேமிக்க தடை செய்யும் வலிமையான சட்டம் வரப் போகிறது என அறிவித்தார்.
பல லட்சம் கோடி பேர் ஒரே நொடியில் தகவல்களை கையாண்டால் நமது சர்வர்கள் தாங்குமா?
இந்தக் கேள்விக்கான விடைத் தேடலில் அதிவேக இன்டர்நெட், தங்கு தடையில்லா மின்சாரம் அதிவேக செயல்பாடுகள் கொண்ட கணினி தேவைப்படுகிறது. இவை அனைத்தையும் கையாண்டு சாதிக்கத் திறமையான சாமர்த்தியசாலிகளும் மிக அவசியம் தேவைப்படுகிறது.
தமிழகத்தில் மின்சார புரட்சி காரணமாக நொடிப்பொழுதும் மின் தடையின்றி தங்கு தடையில்லா மின்சார வினியோகம் இருக்கிறது. அதை உறுதி செய்தது ரஷ்யா தான்!
நமது இன்டர்நெட் வேகம் சர்வதேச வளர்ச்சிகளை கொண்டு அதை நம் நாட்டிலும் தவழ வைத்தது நமது கடந்த 20 ஆண்டுகால தகவல் புரட்சி கொள்கைகள் ஆகும்.
இனி தேவைப்படுவது அதிவேக கணினிகள் அதற்கு தேவையான அதிமுக்கிய உதிரி பாகம் ‘செமி கண்டக்டர்கள்’ ஆகும்.
தென்சீனக் கடல் பகுதியில் இருக்கும் ஓரு மிகச்சிறிய புள்ளிகளாய் இருக்கும் ஹாங்காங்கும் தைவானும் உலக செமி கண்டக்டர்கள் தயாரிப்பில் முழு ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதை தகர்த்தெறிந்து நாமும் அதில் சாதிக்க விரிவான செயல் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்து அதை செயல்படுத்தியும் வருகிறார்.
இந்தியா விரைவில் செமி கண்டக்டர்களை தயாரிக்கும் நாடாக உயர்ந்துவிட்டால் நமது கணினிகள் இன்றைய செயல்திறனை விட அதிவேகமாக உயரும். விலைகள் நம் தனிநபர் வருமான எல்லைக்குள் இருக்கும்.
அதாவது மொபைல் போன் எப்படி தினக்கூலி சாமானியன் வரை வந்து விட்டதோ, அதே புரட்சியைத் தகவல் தொழில்நுட்பத்திலும் காணப் போகிறோம்.
இதே செமிகண்டக்டர் புரட்சியின் பயனாக அதிவேக பறக்கும் ரெயில்களின் பாதுகாப்பு அம்சங்களும் சாலை வாகனங்களின் மேன்மையையும் அடுத்த தலைமுறை பார்க்கப் போகிறது.
உக்ரைனில் போர் பதட்டம், வளைகுடா நாடுகளில் யுத்த காட்சிகள் என அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் சிக்கித் தவிக்கையில் இந்தியா Global South அதாவது தென்னுலக வளர்ச்சியின் அச்சாணியாக உயர்ந்து வருகிறது.
இதுவரை நாம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு பதில் தரும் போதெல்லாம் மிக கவனத்துடன் நடுநிலையாக பேசிய வார்த்தைகளில் நம் வளர்ச்சியின் மீதிருந்த அவநம்பிக்கை வெளிப்பட்டு வந்தது அல்லவா? அது சமீபமாக மாறி விட்டது.
இதை 2 நாட்களுக்கு முன்பு ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் கூறிய வார்த்தைகள் நிரூப்பிக்கிறது.
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை இருப்பதால் பல நாடுகள் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்கக் கூடாது என்று கூறியதற்கு பதில் தந்த நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பாராட்டியது எதற்கு தெரியுமா?
‘ஐரோப்பிய நாடுகள் மற்றவர்களுக்கு உபதேசம் தரும் முன் தங்களை முதலில் பார்க்க வேண்டும்’ என்று அவர் கூறியதையே ரஷ்ய அமைச்சர் பாராட்டியுள்ளார்.